Tamilசெய்திகள்

கஜா புயலுக்கான நிதி கேட்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

கஜா புயலின் ருத்ரதாண்டவத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். ஏராளமான கால்நடைகளும் இறந்து கிடக்கின்றன.

லட்சக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விட்டன. பல ஊர்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

அமைச்சர்கள், அதிகாரிகள், முகாமிட்டு மீட்பு பணியை துரிதப்படுத்தி வருகின்றனர். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் நிவாரண பணியை கவனித்து வருகின்றனர்.

ஆனாலும் பல பகுதிகளுக்கு மின் இணைப்பு, குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள் கிடைக்காமல் பொது மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொது மக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாரிகளின் வாகனங்களுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் அரங்கேறி உள்ளது. இதனால் பதட்டம் நிறைந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயலில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டார். உயிரிழந்த மாடு ஒன்றுக்கு ரூ.30 ஆயிரமும், ஆடுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிடுகிறார். அவருடன் அமைச்சர்கள், அதிகாரிகள் உடன் செல்கின்றனர். கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அறிக்கை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

சேத விவரம் முழுமையாக கிடைத்ததும் மத்திய அரசிடம் இருந்து நிவாரண நிதிகோர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந்தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து புயல் நிவாரண பணிகளுக்கு நிதி கேட்க உள்ளார்.

முதற்கட்டமாக ஒரு தொகையை ஒதுக்கும்படியும், அதன் பிறகு மத்திய குழு சேத விவரங்களை பார்வையிட்ட பிறகு முழு தொகையையும் தந்து உதவ வேண்டும் என்றும் வலியுறுத்த உள்ளார்.

தமிழகத்துக்கு பிரதமர் மோடி இந்த முறை அதிக நிதி ஒதுக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *