கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்ட முதல்வர்
வங்க கடலில் உருவான கஜா புயல் நாகை மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. இந்த புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்படைந்தன. புயலால் இறந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் புயல் சேதத்தை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டார். காலை 8 மணியளவில் திருச்சி வந்து சேர்ந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புயல் சேத பகுதிக்கு சென்றார். பின்னர் புயல் சேதங்களை நேரில் பார்வையிட்டார். அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் உடன் சென்று புயல் சேதங்களை ஆய்வு செய்கின்றனர்.
புதுக்கோட்டையின் மச்சுவாடியில் இருந்து ஆய்வை தொடங்கிய முதல்வர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்கிறார். பின்னர் தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகையில் புயல் சேத பகுதிகளை பார்வையிடுகிறார். பின்பு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்க உள்ளார்.