X

கஜா புயல் எதிரொலி – கடலூருக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்

கஜா புயல், கடலூர்- பாம்பன் இடையே கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று காலை அரக்கோணத்திலிருந்து வேன் மூலம் 25 தேசிய பேரிடர் குழுவினர் கடலூர் வந்தனர்.

மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா மைதானத்தில் அவர்கள் தங்கியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் அதிகமாக வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்களை கண்டறிந்து அவர்கள் அங்கு அனுப்பப்படுவார்கள்.

கடலூருக்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த சிவக்குமார் கூறியதாவது:

அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து நாங்கள் 25 பேர் வந்துள்ளோம். பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை காப்பாற்றுவோம்.

கடலூர், புதுவை, நாகப்பட்டினம், காரைக்கால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 8 குழுக்களாக சென்றுள்ளோம். குழு கமாண்டர் நிஷால் தலைமையில் 25 பேர் கடலூர் மாவட்டத்துக்கு வந்துள்ளோம்.

படகுகள், லைட்டுகள் உள்ளிட்ட பல்வேறு தேவையான பொருட்கள் கொண்டு வந்துள்ளோம். புயலை எதிர்கொள்ள எங்கள் பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.