X

கஜா புயல் பாதிப்பு – தேவதானபட்டியில் 800 ஏக்கர் வாழை, செங்கரும்பு சேதம்

நாகை அருகே மையம் கொண்ட கஜா புயல் தேனி மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. சுருட்டி வீசிய சூறாவளியால் விளை நிலங்கள் நாசமானது. தேவதானபட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கரும்பு மற்றும் வாழைகள் அதிகளவில் பயிரிடப்பட்டது.

கஜா புயலால் வராகநதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜெயமங்கலம், குள்ளப்புரம், மேல்மங்கலம், வடுகபட்டி பகுதியில் கரையோர இருந்து விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் நெற்பயிர்கள் சேதமானது.

மஞ்சளாறு அணை அருகே சட்டமாவு, காமாட்சி அம்மன் கோவில் மற்றும் பாசன பகுதியில் 800 ஏக்கரில் வாழை- செங்கரும்பு பயிரிடப்பட்டு இருந்தது. இதில் கரும்பு பொங்கல் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.

கொடைக்கானல் மலை பகுதியில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த மழையால் மஞ்சளாறு அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. எனவே மஞ்சளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் கரும்பு, வாழை தோட்டங்களுக்குள் புகுந்தது. இதனால் 800 ஏக்கர் நாசமானதால் விவசாயிகள் கண்ணீர் வடித்தனர்.

வறட்சியால் பாதிக்கபட்ட விவசாயிகள் இந்த ஆண்டு ஓரளவு விளைச்சல் வரும் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவை அனைத்தும் நாசமானதால் விவசாயிகள் என்ன செய்வது என தவித்தபடி உள்ளனர்.