பிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலியிறுதி ஆட்டம் ஒன்றில், தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சாய்னா நேவால், ‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங்குடன் (சீனதைபே) பலப்பரீட்சை நடத்தினார்.
முதலாவது செட்டில் 20-16 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வெல்வது போல் நெருங்கிய சாய்னா கடைசி கட்டத்தில் கோட்டை விட்டார். இதன் பிறகு 2-வது செட்டில், தாய் ஜூ யிங்கின் ஷாட்டுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சாய்னா ‘சரண்’ அடைந்தார்.
முடிவில் தாய் ஜூ யிங் 22-20, 21-11 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். தாய் ஜூ யிங்கை அடக்க முடியாமல் திணறி வரும் சாய்னா அவருக்கு எதிராக கடைசியாக ஆடிய 12 ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வி அடைந்துள்ளார். இதில் கடந்த வாரம் டென்மார்க் ஓபன் இறுதி ஆட்டத்தில் தோற்றதும் அடங்கும்.