பார்முலா 1 கார் பந்தயம் – ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இறுதி கட்டத்தை எட்டி விட்ட இந்த போட்டியில் 19-வது சுற்றான மெக்சிகோ கிராண்ட்பிரி போட்டி மெக்சிகோ சிட்டியில் நேற்று முன்தினம் நடந்தது. பந்தய தூரமான 305.354 கிலோமீட்டர் தூர இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.
இதில் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 1 மணி 38 நிமிடம் 28.851 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்து அதற்குரிய 25 புள்ளிகளை கைப்பற்றினார். அவரை விட 17.316 வினாடிகள் பின்தங்கிய ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 2-வது இடத்தை பிடித்து 18 புள்ளிகள் பெற்றார்.
பின்லாந்து வீரர் கிமி ராய்க்கோனென் (பெராரி அணி) 3-வது இடத்தை பெற்று 15 புள்ளிகளை தனதாக்கினார். நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 4-வது இடம் பிடித்து 12 புள்ளிகள் பெற்றார். இந்த போட்டியில் 7-வது இடத்துக்குள் வந்தாலே ‘சாம்பியன்’ பட்டத்தை தக்க வைத்து கொள்ள முடியும் என்ற நிலையில் களம் கண்ட லீவிஸ் ஹாமில்டன் 4-வது இடத்தை பிடித்ததன் மூலம் மீண்டும் ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார்.
இன்னும் 2 சுற்று பந்தயங்கள் (பிரேசில் கிராண்ட்பிரி நவம்பர் 11-ந் தேதி, அபுதாபி கிராண்ட்பிரி நவம்பர் 25-ந் தேதி) எஞ்சி இருக்கும் நிலையில் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தி உள்ளார். 33 வயதான லீவிஸ் ஹாமில்டன் பார்முலா1 ‘சாம்பியன்’ பட்டத்தை வெல்வது இது 5-வது முறையாகும். அவர் ஏற்கனவே 2008, 2014, 2015, 2017-ம் ஆண்டுகளில் பட்டத்தை வென்று இருந்தார். அத்துடன் பார்முலா1 பட்டத்தை அதிக முறை வென்ற வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஜெர்மனியின் மைக்கேல் சூமாக்கருக்கு (7 முறை) அடுத்த 2-வது இடத்தை அர்ஜென்டினாவின் ஜூயன் மானுவேல் பான்ஜியோவுடன் (5 முறை) இணைந்து லீவிஸ் ஹாமில்டன் பெற்றார்.