வெளிநாடுகளில் நிதி திரட்ட முயற்சிக்கும் கேரள அமைச்சர்களுக்கு மத்திய அரசு தடை

கேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த வரலாறு காணாத பெருமழையின் எதிரொலியாக பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழை, வெள்ளம் சார்ந்த விபத்துகளில் 493 பேர் உயிரிழந்தனர்.

லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். வெள்ளத்தால் நிலைகுலைந்த கேரளாவுக்கு பல்வேறு மாநில அரசுகளும், தொழிலதிபர்கள், நடிகர்-நடிகைகள், விளையாட்டு உள்ளிட்ட பல்துறை பிரபலங்கள் நிதியுதவி அளித்தனர்.

கேரள மக்கள் அதிகமாக பணியாற்றிவரும் வளைகுடா நாடுகளும் பண உதவி செய்ய முன்வந்தன. ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் 700 கோடி ரூபாய் நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த நிதியை அனுமதிக்க மாட்டோம் என மத்திய அரசு மறுத்து விட்டது.

இதற்கிடையே, வெளிநாடுகளில் வாழும் கேரள மாநிலத்து மக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்ட முதல் மந்திரி பினராயி விஜயன் தீர்மானித்தார். இதன்படி, இம்மாதம் 17-ம் தேதி (இன்று) முதல் 21-ம் தேதிவரை அம்மாநிலத்தை சேர்ந்த 17 மந்திரிகள் ஆளுக்கொரு நாடாக சென்று கேரள மக்களிடம் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டமிடப்பட்டது.

இதில் ஒரு பகுதியாக முதல் மந்திரி பினராயி விஜயன் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இன்று புறப்பட்டு செல்வார். 21-ம் தேதி அவர் நாடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பினராயி விஜயன் பயணத்துக்கு மட்டும் அனுமதி அளித்த மத்திய அரசு இதர மந்திரிகள் செல்ல அனுமதி மறுத்து விட்டதாக கேரள அரசு வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news