இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத் ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் இடம்பிடித்திருந்தார். உமேஷ் யாதவ் உடன் புதுப்பந்தில் பந்து வீச்சை தொடங்கிய அறிமுக வீரரான ஷர்துல் தாகூர் 10 பந்துகள் வீசிய நிலையில் காயத்தால் வெளியேறினார்.
இதனால் உமேஷ் யாதவ் மட்டுமே வேகப்பந்து வீச வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்திய அணிக்கு தேவையான நேரத்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்கள். இன்று இந்தியா 95 ஓவர்கள் வீசியது. இதில் உமேஷ் யாதவ் மட்டும் 23 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பேட்டிங் செய்ய சாதகமான இதுபோன்ற ஆடுகளத்தில் ரன்களை கட்டுப்படுத்துவது மிகக்கடினம் என்று உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உமேஷ் யாதவ் கூறுகையில் ‘‘ஆடுகளம் பேட்டிங் செய்ய சிறந்த வழியில் இருந்தது. எங்களால் வழக்கமான ஸ்விங்கோ, ரிவர்ஸ் ஸ்விங்கோ செய்ய இயலவில்லை. ஆடுகளம் மிகவும் ஃப்ளாட்டாக இருந்தது.
இதுபோன்ற ஆடுகளத்தில் ரன்களை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினம். எவ்வளவு முடியோ அந்த அளவிற்கு ரன்களை கட்டுப்படுத்த முற்சி செய்யும்போது, அவர்கள் ஒன்று இரண்டு என ரன்கள் எடுத்து விட்டார்கள்’’ என்றார்.