X

பார்முலா ஒன் கார் பந்தயம் – 17 வது சுற்றில் ஹமில்டன் வெற்றி

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட இந்த போட்டியில் 17-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள சுஜூகா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரமான 307.471 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் அதிவேகமாக சீறிப்பாய்ந்தனர்.

இதில் முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 27 நிமிடம் 17.062 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி முதலிடத்தை பிடித்து, அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். தொடர்ச்சியாக அவர் பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். மொத்தத்தில் இந்த சீசனில் ஹாமில்டனின் 9-வது வெற்றியாக அமைந்தது. அவரை விட 12.919 வினாடி பின்தங்கிய பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 2-வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றார். ஹாமில்டனின் பிரதான எதிரியான 4 முறை சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டதால் அவருக்கு 8 புள்ளிகளே கிடைத்தன.

இதுவரை நடந்துள்ள 17 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 331 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். வெட்டல் 264 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வால்டெரி போட்டாஸ் 207 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். 18-வது சுற்று போட்டி அமெரிக்காவில் வருகிற 21-ந்தேதி நடக்கிறது.

Tags: sports news