திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அ.ம.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதத்தை முடித்து வைத்து துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-
நிலக்கோட்டை தொகுதியில் 1977-க்கு பிறகு 1996 தேர்தல் நீங்கலாக பிற தேர்தலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நிறுத்திய வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ.வாக ஆக்கப்பட்ட 18 பேர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தகுதி நீக்கம் செய்துள்ளார்.
இது அவருக்கு தற்காலிக வெற்றிதான். மக்கள் ஆதரவு இல்லாத ஆட்சி விரைவில் அகற்றப்படும். மக்கள் இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
இடைத்தேர்தல் மட்டுமல்லாது மக்களவை தேர்தல் உள்பட எந்த தேர்தல் வந்தாலும் அ.ம.மு.க. வெற்றி பெறும். அ.தி.முக. டெபாசிட் கூட வாங்க முடியாது. வெற்றியும் பெற முடியாது. என்னை துரோகி என்கிறார்கள். ஆனால் உண்மையான துரோகி தற்போதைய ஆட்சியாளர்கள்தான்.
எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆட்சியை அகற்றும் வரை எனது போராட்டம் ஓயாது. நடைபெற உள்ள இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.