டெண்டர் முறைகேடு வழகை சிபிஐ விசாரிக்க லஞ்ச ஒழுப்புத்துறை எதிர்ப்பு!
தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதற்கிடையே, முதல்வர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என மனுதாரர் கூடுதல் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது ஏற்புடையதல்ல என மனுவில் கூறப்பட்டுள்ளது.