X

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாகை மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்

கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 20-ந்தேதி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தனர்.

மேலும் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மோசமான வானிலை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்ல இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பயண திட்டம் திடீரென பாதியில் ரத்தானது.

இதற்கிடையே விடுபட்ட பகுதிகளை பார்வையிட முடிவு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று (செவ்வாய்க்கிழமை) ரெயில் மூலம் நாகைக்கு புறப்பட்டார். காரைக்கால் விரைவு ரெயில் மூலமாக நாகைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) காலை வந்தடைந்தார்.

பின்னர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் முதற்கட்டமாக நிவாரணப் பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகையை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வழங்கினர். தென்னை மரங்களை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் தென்னங்கன்றுகளையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, ஓஎஸ் மணியன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதன்பின்னர் நாகையில் பல்வேறு இடங்களுக்கு சென்று புயல் பாதிப்பை பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்கிறார். இதேபோல் திருவாரூரிலும் இன்று ஆய்வுப் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார்.