X

திமுக-வுக்கும், பா.ஜ.க-வுக்கும் எந்த தொடர்பும் இல்லை – இல.கணேசன்

திருவாரூரில் பா.ஜனதா கட்சியின் பொற்றாமரை அமைப்பு சார்பில் கலை இலக்கிய நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் இல. கணேசன் எம்.பி. கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பா.ஜனதாவுடன் சேர வேண்டும் என்று தி.மு.க.வினர் கனவிலும் நினைக்க மாட்டார்கள். பா.ஜ.க.வுக்கும் தி.மு.க. வுக்கும் எந்த உறவும் இல்லை. அனைத்து கட்சியினரிடமும் நாங்கள் பழகி வருகின்றோம். ஆனால் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உறவு உண்டு. இதைப்போல அனைத்து மாநில அரசுகளுடன் மத்திய பா.ஜனதா அரசு இணக்கமாகச் செயல் படுகிறது.

பாரம்பரியமாக பல நூறு ஆண்டுகளாக கடைப்பிடித்து வரக்கூடிய ஒரு பழக்கத்தை யாரோ ஒரு சிலர் வழக்குத் தொடுத்தார்கள் என்பதற்காக அதை மாற்றி தீர்ப்பு வந்து இருக்கலாம். பொதுவாக பக்தர்கள் சட்டத்தை மதிப்பவர்கள். அதனால் நீதிமன்றத்தின் தீர்ப்பை கூட மக்கள் எதிர்க்காமல் இருக்கலாம். சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பிற்கு எதிராக தேவசம் போர்டு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வருகிறது. அதில் வேறு விதமான நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம். இந்த தீர்ப்பினால் பெண்கள் அதிகளவில் சபரிமலைக்கு செல்வார்கள் என்று கற்பனை செய்தால் ஏமாத்து போவார்கள் . விளம்பரத்திற்காக சிலர் வேண்டுமானால் செல்ல முயற்சிக்கலாம்.

தகாத உறவு குறித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த சமுதாயம் தர்மத்தின் அடிப்படையில் உள்ள சமுதாயம் அதனால் இந்த சமுதாயத்தில் அந்த தீர்ப்பினால் எந்த மாற்றத்தையும் உண்டாக்க முடியாது என்பது என் கருத்து. இதனால் இந்த சமுதாயத்தில் எந்தத் தவறான மாற்றமும் வராது.

ராஜீவ் கொலை வழக்கில குற்றம்சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலை குறித்து யார் பேசினாலும் பலன் இல்லை. கவர்னர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறார்.

நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளதால் எச். ராஜாவை கைது செய்ய முடியாது என காவல்துறை உயர் அதிகாரியே தெரிவித்துள்ளார். இதுபற்றி எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது பெரிய வி‌ஷயமல்ல.

நாடு முழவதும் எங்களுக்கு ஆதரவு கூடி வருகிறது. அதனால் பாராளுமன்றத்தில் தனித்து இருந்து தற்போது பெற்ற வெற்றியை விட கூடுதலான இடங்களை பெறுவோம். இன்னும் 15 ஆண்டுகளுக்கு நரேந்திர மோடி தான் பிரதமர்.

இவ்வாறு இல.கணேசன் தெரிவித்தார்.