ஆசிய கோப்பை ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தியா ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, துணைக் கேப்டன் ஷிகர் தவான், பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் மற்றும் துணைக் கேப்டனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் எம்எஸ் டோனி கேப்டனாக பொறுப்பேற்றார். டோனி ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக பொறுப்பேற்கும் 200-வது போட்டி இதுவாகும். இதன்மூலம் 200 போட்டிகளில் கேப்டனாக இருந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
டோனி கடைசியாக 2016-ம் ஆண்டு அக்டோபர் 29-ந்தேதி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கேப்டனாக பணியாற்றினார். அதன்பின் தற்போது 696 நாட்கள் கழித்து கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.
எம்எஸ் டோனி தலைமையில் இந்தியா 199 போட்டிகளில் விளையாடி 110-ல் வெற்றியை ருசித்துள்ளது. 74 போட்டியில் தோல்வியும் சந்தித்துள்ளது. 4 போட்டிகள் ‘டை’யில் முடிந்துள்ளன. 11 போட்டிகள் எந்தவித முடிவையும் சந்திக்கவில்லை.