டென்மார்க் ஓபன் பேட்மிண்ட்ன் – இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த சாய்னா நேவால்
டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 10-வது இடம் வகிக்கும் சாய்னா நேவால் (இந்தியா), ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் தாய் ஜூ யிங்குடன் (சீனதைபே) மல்லுகட்டினார். முதல் செட்டை தாய் ஜூ யிங் வசப்படுத்த, 2-வது செட்டில் சாய்னாவின் கை ஓங்கியது.
இந்த செட்டில் ஒரு கேம் 41 ஷாட்டுகள் வரை நீடித்தது. 2-வது செட்டை சாய்னா கைப்பற்றியதால், கடைசி செட்டில் விறுவிறுப்பு மேலும் எகிறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி செட்டில் தாய் ஜூ யிங் சாதுர்யமான ஷாட்டுகளால் சாய்னாவை மிரள வைத்தார். இந்த செட்டில் சாய்னாவினால் கொஞ்சம் கூட ஈடுகொடுத்து ஆட முடியவில்லை. 52 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் தாய் ஜூ யிங் 21-13, 13-21, 21-6 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி மகுடம் சூடினார். 83 ஆண்டு கால டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் வரலாற்றில் சீனதைபே நாட்டை சேர்ந்த ஒருவர் பட்டம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
தாய் ஜூ யிங்குக்கு எதிராக இதுவரை 18 முறை மோதியுள்ள சாய்னா அதில் சந்தித்த 13-வது தோல்வி இதுவாகும். 2014-ம் ஆண்டில் இருந்து ஜூ யிங்குக்கு எதிராக மோதிய 11 ஆட்டங்களிலும் சாய்னாவுக்கு தோல்வியே மிஞ்சியிருக்கிறது. வாகை சூடிய ஜூ யிங்குக்கு ரூ.40 லட்சமும், சாய்னாவுக்கு ரூ.20 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.