செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏராளமான மோசடிகள் நடக்கின்றன. சமீபத்தில் முன்னணி நடிகையான ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்டில் செல்வது போன்ற வீடியோ வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து நடிகை ராஷ்மிகா ‘தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது’ என்று வேதனையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து deep fake மூலம் ‘டைகர் 3’ திரைப்படத்தில் நடிகை கத்ரீனா கைஃப்யின் சண்டை காட்சி மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்துடன் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாலிவுட் நடிகை கஜோல் உடை மாற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால், அந்த வீடியோ deep fake மூலம் போலியாக உருவாக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களில் பிரபலமான ரோஸி பிரீனின் வீடியோவில் அவரது முகத்திற்கு பதிலாக கஜோலின் முகத்தை வைத்து இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.