X

டேட்டா லோக்கலிசேசன் பாலிசி – பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பிகள் கடிதம்

‘டேட்டா லோக்கலிசேசன் பாலிசி’ என்று அழைக்கப்படுகிற தரவு உள்ளூர் மயமாக்கல் கொள்கை அடிப்படையில் பாரத ரிசர்வ் வங்கி கடந்த ஏப்ரல் மாதம் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும், கூட்டுறவு வங்கிகளுக்கும், பணப்பட்டுவாடா நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.

இந்த சுற்றறிக்கையில் இந்தியாவில் எல்லாவிதமான பண பட்டுவாடா தொடர்பான தகவல்களையும் உள்நாட்டு அமைப்பில்தான் (சர்வரில்) சேமித்து வைக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறி உள்ளது.

இந்த உத்தரவினை 6 மாதத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும். இதை உறுதி செய்து அனைத்து தரப்பினரும் இன்றைக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இன்றுடன் கெடு முடிவதால், இந்த உத்தரவை அனைத்து வங்கிகளும், பண பட்டுவாடா நிறுவனங்களும் நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும்.

பாரத ரிசர்வ் வங்கி, கண்காணிப்புக்காகவும், பாதுகாப்புக்காகவும் எடுக்கப்படுவதாக கூறப்படுகிற இந்த நடவடிக்கையால், அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

குறிப்பாக இந்தியாவில் பண பட்டுவாடாவில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிற, உலகளாவிய பண பட்டுவாடா நிறுவனங்களான மாஸ்டர் கார்டு, விசா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆகியவை பாதிப்புக்கு ஆளாகின்றன. அவற்றின் பண பரிமாற்ற நடவடிக்கைகளுக்கு ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவு கடிவாளமாக அமைகிறது.

எனவே இந்த தரவு உள்ளூர் மயமாக்கல் கொள்கையை தளர்த்துமாறு இந்திய நிதி அமைச்சகத்தையும், பாரத ரிசர்வ் வங்கியையும் மேற்கண்ட நிறுவனங்கள் நாடியும், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என தெரிய வந்துள்ளது.

அந்த வகையில் கடைசி முயற்சியாக, பிரதமர் நரேந்திரமோடிக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை எம்.பி.க்கள் ஜான் கார்னின் (குடியரசு கட்சி), மார்க் வார்னர் (ஜனநாயக கட்சி) ஆகியோர் ஒரு கடிதம் எழுதி உள்ளனர்.

அந்தக் கடிதத்தில், “ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை இந்தியாவில் வர்த்தகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்களின் செயல்பாடுகளில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும். உங்கள் நாட்டின் சொந்த பொருளாதார நோக்கங்களையும் கூட பாதித்து விடும். இந்திய குடிமக்களின் தகவல்களை பாதுகாக்கும் திறனை இது மேம்படுத்தாது” என கூறி உள்ளனர்.

தகவல் பாதுகாப்பை குறைப்பதோடு மட்டுமின்றி, தரவு உள்ளூர் மயமாக்கல் நடவடிக்கை தொழில் நிறுவனங்களுக்கும், நுகர்வோருக்கும் பாதிப்பை உண்டாக்கி விடும் என்றும், இறுதியில் தரவு சார்பு சேவை வழங்குவதற்கான செலவினை அது அதிகரித்து விடும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

எனவே இதில் மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.