வங்க கடலில் உருவான கஜா புயல் – 4,400 பகுதிகளுக்கு வெள்ள அபாயம்
வங்க கடலில் உருவான கஜா புயல் 15-ந்தேதி வட தமிழகத்தில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 14-ந்தேதி இரவு முதல் 15-ந்தேதி வரை பலத்த காற்றுடன் மழை கொட்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கும் வருவாய்த்துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளது.
புயல் பாதிப்பு பகுதிகளை துல்லியமாக கணித்து மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்கும்மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்ய கோபால் கூறியதாவது:-
கஜா புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் சென்னை மற்றும் கடலோர மாவட்ட நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், பயிற்சி பெற்ற போலீசார் அந்தந்த பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள முதல் நிலை மீட்பாளர்கள் ஆகியோரை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை.
மழை பாதிப்பு குறித்து அறிந்து விரைந்து செயல்பட ‘டி.என்.ஸ்மார்ட்’ என்ற புதிய மொபைல் ஆப் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புயலால் தமிழகத்தில் 4,400 இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு முன் 2016-ல் வர்தா புயல் தாக்கிய போது கடலூர் மாவட்டத்தில் அதிகம் சேதம் ஏற்பட்டது. எனவே இந்த முறை கடலூர் மாவட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து மீட்பு படையினர் தயாராக வைக்கப்படுகிறார்கள்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது கலெக்டர் அன்புச்செல்வன் கூறியதாவது:-
கஜா புயல் நெருங்கி வருவதையொட்டி மாவட்டத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ள சேதத்தை தடுக்க படகுகள் மற்றும் மீட்பு படையினர் 1400 பேர் தயார் நிலையில் உள்ளனர்.
ஒன்றியம், நகராட்சிகளில் தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடலோரத்தில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்படுவர்.
அவர்களுக்கு தேவையான உணவு சமைத்து வழங்க சத்துணவு ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் மின்சாரம் தடைப்பட்டால் கூட்டுகுடிநீர் வழங்க ஜெனரேட்டர், டீசல் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ உதவிகள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புயல் நெருங்கும் போது காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மரங்கள் விழுந்து விட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மரங்கள் விழும் போது அதை அப்புறப்படுத்த எந்திர வாள், பொக்லைன் எந்திரம் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புயல் முன்எச்சரிக்கை பணிகளை கவனிக்க கடலூர் மாவட்டத்தின் 13 ஊராட்சி ஒன்றியங்களில் சப்-கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் கிராம வளர்ச்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளிலும் அந்தந்த கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் சப்-கலெக்டர்கள் மேற்பார்வையிடுவர்.இவ்வாறு அவர் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியிலும் கடல் இன்று அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது.
ரெட்டியார்குப்பம், அனுமந்தை குப்பம், கீழ்குத்துபட்டு குப்பம், உள்பட 19 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை .
மீன்பிடி படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.