புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன் தள்ளுபடி! – அரசு ஆலோசனை
கஜா புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி குறித்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:
கஜா புயலானது தலைமுறை காணாத அளவுக்கு பெரிய பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழக அரசு முனைப்புடன் சீரமைப்பு பணி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்பும் சரி, தற்போதும் சரி. இயற்கை இடர்பாடு காலங்களில் அ.தி.மு.க. அரசு மக்களுக்கு மனச்சாட்சிப்படி பணியாற்றுவதை சகித்துக்கொள்ள முடியாமல் தி.மு.க. அரசியல் செய்கிறது.
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ஆலோசனைக்கு பிறகு தமிழக அரசு முடிவெடுக்கும். பசுமை வழி சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்த தென்னை மரங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டது வேறு. கஜா புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளுக்கு நிவாரணம் அறிவிப்பதென்பது வேறு. இது போன்ற இயற்கை இடர்பாடுகளுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதல் படிதான் நிவாரணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கவும், நிவாரணம் வழங்கவும் நிதி வழங்க கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசு நிதி அளிக்கும் முன்னரே தமிழக அரசு வேண்டிய நிதியை அளித்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் களமாவூர், கீரனூர், குளத்தூர், அடப்பாக்காரசத்திரம், திருவப்பூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகளை பார்வையிட்டதோடு, பொதுமக்களின் குறைகளையும் ஓ.பன்னீர் செல்வம் கேட்டறிந்தார்.