Tamilசெய்திகள்

காங்கிரஸ் மாவோயிஸ்டுகளை ஆதரிக்கின்றது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்கார் மாநில சட்டசபைக்கு வருகிற 12 மற்றும் 20-ந்தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அந்த மாநிலத்தில் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி, பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து சத்தீஷ்கார் மாநிலத்தில் முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பஸ்தார் பகுதியில் நேற்று அவர் பிரசாரம் மேற்கொண்டார். அங்குள்ள ஜக்தல்பூர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி காங்கிரசை கடுமையாக தாக்கிப் பேசினார்.

அவர் கூறியதாவது:-

பழங்குடியின மக்கள் என்றாலே காங்கிரசுக்கு கேலியாக தெரிகிறது. ஒரு முறை இங்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நான் வந்தபோது பழங்குடியினர் அணியும் தொப்பியை அணிந்தேன். அதை காங்கிரஸ் மிகவும் கிண்டல் செய்தது. இது பழங்குடியின மக்களை அவமதிக்கும் செயல்.

மறைந்த பிரதமர் வாஜ்பாயின் லட்சியம் சத்தீஷ்கார் மாநிலத்தை வளமாக்கவேண்டும் என்பது ஆகும். அதை நிறைவேற்றும் வரை ஓயமாட்டேன். மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பஸ்தார் பகுதியின் வளர்ச்சிக்கு எதையும் காங்கிரஸ் செய்யவில்லை. மாவோயிஸ்டு பயங்கரம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

தலித்துகள், நலிவடைந்த பிரிவினர், பழங்குடியினர் பற்றி காங்கிரஸ் நிறைய பேசுகிறது. அதே நேரம் அவர்களை ஓட்டு வங்கியாக மட்டுமே கருதுகிறதே தவிர ஒருபோதும் மனிதர்களாக மதிப்பதில்லை.

நகர்ப்புற மாவோயிஸ்டுகள் நகரங்களில் குளுகுளு வசதி கொண்ட வீடுகளில் சுகபோகமாக வசிக்கின்றனர். மிகவும் பளிச்சென்று காணப்படுகிறார்கள். அவர்களுடைய குழந்தைகள் வெளிநாடுகளில் படிக்கின்றனர். ஆனால் இவர்கள்தான் பழங்குடியின இளைஞர்களை ரிமோட் கன்ட்ரோல் மூலம் தாக்குதல் நடத்துவதற்கு தூண்டி விடுகின்றனர். இவர்கள் ஏழ்மையில் உழலும் பழங்குடியின இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்துவிட்டனர்.

இதுபோன்ற நகர்ப்புற மாவோயிஸ்டுகள் மீது நடவடிக்கை எடுக்க முயன்றாலோ, பஸ்தார் பகுதிக்கு வந்து மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பேசினாலோ அதை காங்கிரஸ் எதிர்க்கிறது?. இது போன்றவர்களை காங்கிரஸ் ஆதரிப்பது ஏன்?… மாவோயிஸ்டு ஆதரவு மனோபாவத்தில் இருந்து காங்கிரஸ் வெளியே வரவேண்டும்.

மாவோயிஸ்டுகளை ஆதரிப்பவர்கள் யாரும் இங்கே வெற்றி பெறக்கூடாது. பஸ்தார் பகுதியில் உள்ள அத்தனை சட்டசபை தொகுதிகளிலும் பா.ஜனதாவுக்கு நீங்கள் வெற்றியைத் தரவேண்டும். வேறு யாராவது இங்கே வெற்றி பெற்றால் அது பஸ்தார் பகுதிக்கே கறையாக அமைந்துவிடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *