Tamilசினிமா

கல்லூரி மாணவர்களை சந்தித்து பேசும் கமல்ஹாசன்!

சென்னையிலுள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்தனர்.

ஒரு சிலர் தங்கள் ஓட்டுக்களை விற்பதனால் ஊழலின் பாரம் நம் அனைவரின் மேலும் விழுகிறது. ஓட்டுகளை விற்பதனால் ஏற்படும் தீமை குறித்து மாணவர்களாகிய நீங்கள் தான் மற்றவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

அரசியல்வாதிகள் என்னிடம் என் அரசியல் அனுபவம் குறித்து கேட்கிறார்கள். இவர்கள் 40 வருடங்களாக என்ன செய்யக் கூடாது என்பதை கோட்டையில் இருந்தே எனக்கு கற்றுக் கொடுத்தவர்கள். எனவே அவர்களுக்கு எனது நன்றி.

பிற அரசியல் கட்சிகள் செய்த தவறுகளை மக்கள் நீதி மய்யம் செய்யாது. மய்யம் விசில் செயலி மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்களுக்கான பெருமை வாய்ந்த ஆயுதம். அது சர்வதேச அளவில் விருதுகளை வென்றுள்ளது.

மய்யம் விசில் செயலியை கொண்டு வளமான இந்தியாவை உருவாக்க முடியும். மய்யம் விசில் செயலியை இன்று பலர் பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் அதிகமானோர் அதைப் பயன்படுத்துவதற்கு உதவியாக பயிலரங்கம் ஒன்றை நடத்த உள்ளோம்.

உடற்பயிற்சி செய்து உடலை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு நமது நாட்டைக் கட்டமைப்பதும் முக்கியம் என்பதை மாணவ- மாணவிகளாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய அரசியல் சூழலை புரிந்துகொண்டு உங்களுக்கு எது தவறாக தோன்றுகிறதோ அதை மாற்றுவதற்கான வலிமை கொள்ள வேண்டும். எனது முன் அமர்ந்திருக்கும் நீங்கள் தான் நாட்டின் தலைவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மாணவ- மாணவிகள் கேள்விகளுக்கு பதில் அளித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலில் வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்து போட்டியிட வேண்டும் என்று கல்லூரி மாணவ- மாணவிகள் கமல்ஹாசனிடம் கேட்டுக்கொண்டனர்.

முன்னதாக தென் சென்னை வாரிய கோட்டூர் நறிக்குறவர் என்கிற குருவிக்காரர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் தயாரித்த மாலைகளை கமல்ஹாசன், கட்சி நிர்வாகிகள் ஸ்ரீபிரியா, கமீலா நாசர் ஆகியோருக்கு அணிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *