புயலால் வேரோடு சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் புத்துயிர் பெற வைக்க முடியும் – விஞ்ஞானி தகவல்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருச்சிற்றம்பலம், ஒரத்தநாடு மற்றும் நாகை மாவட்டம் வேதாரண்யம், தோப்புத்துறை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் ஓங்கி வளர்ந்த தென்னை மரங்களும், தென்னந்தோப்புகளும் தான் நம்மை வரவேற்கும். இந்த பகுதி மக்களுக்கு முக்கியமான வாழ்வாதாரமாக தென்னை மரங்கள் திகழ்ந்து வந்தது.

இந்த நிலையில் ‘கஜா’ புயல் இந்த பகுதிகளில் இருந்த லட்சக்கணக்கிலான தென்னை மரங்களை வேரோடு சாய்த்தது. வானில் நிமிர்ந்து நின்ற தென்னை மரங்கள் அனைத்தும் தற்போது நிலத்தில் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. பெரும்பாலான தோப்புகள் மொட்டையாக காட்சி அளிக்கின்றன. ஒரு சில தோப்புகளில் ஒன்றிரண்டு மரங்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன.

வாழையடி, வாழையாக தங்கள் குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக திகழ்ந்து வந்த தென்னம்பிள்ளைகளை பறிகொடுத்த தென்னை விவசாயிகள் கண்ணீரும், கம்பலையுமாக உள்ளனர். அன்றாடம் தான் பெற்றெடுத்த பிள்ளைகளை கண்ணும், கருத்துமாக கவனிப்பதுபோல் தாங்கள் பெறாத பிள்ளைகளான தென்னம்பிள்ளைகளையும் கவனித்து வந்தனர்.

தற்போது, தென்னை மரங்களை பறிகொடுத்த தென்னை விவசாயிகள் சிலர், இனிமேலும் தாங்கள் வாழ வேண்டுமா என்று யோசிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கஜா புயலால் வேரோடு சாய்ந்த தென்னை மரங்களுக்கு புத்துயிர் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகதஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த தென்னை விஞ்ஞானி வா.செ.செல்வம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ”புயலால் சாய்ந்த தென்னை மரங்களை நிமிர்த்தி நடும்போது அவை மீண்டும் புத்துயிர் பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. 3 வயது முதல் 5 வயது வரை உள்ள தென்னை மரங்களில் 100 வேர்கள் இருந்தால் போதும். அவற்றை பொக்லின் எந்திரம் மூலம் 70 டிகிரி கோணத்தில் அதாவது சற்று சாய்வாக தூக்கி நிறுத்தி, மண் நிரப்ப வேண்டும். அத்துடன் மரங்களின் சாய்வான பகுதியில் மூங்கில் குச்சிகள், சவுக்கு குச்சிகள், கருங்கல் கொண்டு முட்டுக்கொடுக்கலாம்.

முன்னதாக தென்னை மரங்களில் உள்ள தேங்காய்கள், மட்டைகள், இளநீர் உள்ளிட்டவற்றை வெட்டி எடையை குறைப்பது மிகவும் அவசியம். இவ்வாறு செய்தால் 50 முதல் 60 நாட்களில் புது வேர் வந்து விடும். அதன் பிறகு அடுத்தடுத்த அறுவடைகளில் தேங்காய் மகசூல் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

பொதுவாக தென்னை மரங்களில் 5,500 வேர்கள் இருக்கும். பெரிய மரங்கள் என்றால் 6,500 வேர்கள் வரை இருக்கும். சாய்ந்த மரங்களை செங்குத்தாக நடக்கூடாது. செங்குத்தாக நட்டால் வேர்கள் மண்ணில் இருந்து முற்றிலுமாக பிடுங்கி விடுவதற்கு வாய்ப்பு உண்டு. புயல் காற்றில் மட்டை ஒடிந்த மரங்கள் நிறைய உள்ளன. இவற்றை காயமடைந்த மரங்கள் என கூறலாம். இந்த காயத்துக்கு மருந்து “வி.எஸ். மிக்ஸ் பவுடர்”. இந்த மருந்தை கலந்து மரத்தின் குருத்து மீது தெளித்தால், வண்டுகள் தாக்காது.” என்று தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools