‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் காந்தியின் போதனைகள் தான் வழி நடத்தின – பிரதமர் மோடி

இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய முக்கிய தலைவர்களுள் முக்கியமானவர் மகாத்மா காந்தி. வன்முறையில் ஈடுபடாமல், சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு, இந்தியாவின் சுதந்திரத்திற்கு வித்திட்டதால், மகாத்மா என்று அழைக்கப்பட்டார். இவரது பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்ததினம் நாடு முழுவதும் நேற்று (அக். 2) கொண்டாடப்பட்டது. காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தினார்கள். நாடு முழுவதும், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, ஜனாதிபதி மாளிகையில், ‘மகாத்மா காந்தி சர்வதேச தூய்மை பிரசார மாநாடு’ கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. நேற்று அதன் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

உலகத்தை தூய்மைப்படுத்த 4 ‘பி’ (ஆங்கில எழுத்து) எழுத்து மந்திரங்கள் தேவைப்படுகிறது. அரசியல் தலைமை, பொது நிதி, கூட்டாக செயல்படுதல், மக்கள் பங்கேற்பு ஆகியவையே அந்த மந்திரங்கள்.

இன்று ஏராளமான நாடுகள், தூய்மை பிரசாரத்தில் ஈடுபடுகின்றன. இது, முன்பு எப்போதும் கேள்விப்படாதது. ஒரு இந்திய பிரசாரம், உலகின் மாபெரும் மக்கள் இயக்கமாகி இருப்பதைக் கண்டு பெருமைப்படுகிறேன்.

4 ஆண்டுகளுக்கு முன்பு, உலகளவில் திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களில் இந்தியர்கள் எண்ணிக்கை 60 சதவீதமாக இருந்தது. தற்போது, இந்த எண்ணிக்கை 20 சதவீதமாக குறைந்துள்ளது. 4 ஆண்டுகளில், 90 சதவீதம் பேர் கழிப்பறைகளை பயன்படுத்தும் பழக்கத்துக்கு வந்துவிட்டனர்.

5 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி மலம் கழிக்கும் பழக்கம் இல்லாதவை ஆகியுள்ளன. 25 மாநிலங்கள் தங்கள் பகுதியில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லை என்று அறிவித்துள்ளன. இவையெல்லாம் ‘தூய்மை இந்தியா’ இயக்கம், மக்களின் மனதில் ஏற்படுத்திய மாற்றங்கள். கிராமப்புறங்களில் நோய்களின் எண்ணிக்கை குறைந்ததுடன், மருத்துவ சிகிச்சைக்கு செலவிடும் பணத்தின் அளவும் குறைந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் எனக்கு திருப்தி அளிக்கின்றன.

சுதந்திரப் போராட்ட காலத்தில் கூட மகாத்மா காந்தி, தூய்மை பணிக்கு முன்னுரிமை கொடுத்தார். 1945-ம் ஆண்டு அவர் வெளியிட்ட ‘ஆக்கப்பூர்வ திட்டங்கள்’ பட்டியலில், கிராமப்புற தூய்மை முக்கிய இடம் பிடித்திருந்தது. காந்தியின் கொள்கைகளை ஆழமாக புரிந்து கொண்டிருக்காவிட்டால் தூய்மை பிரசாரம், எனது அரசின் முன்னுரிமை பட்டியலில் இடம் பிடித்து இருக்காது. ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் காந்தியும், அவரது போதனைகளும்தான் என்னை வழிநடத்தின என அவர் பேசினார்.

இதில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் பங்கேற்றார். ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்காக பிரதமரை அவர் பாராட்டினார்.

அதன்பின்னர், மகாத்மா காந்திக்கு பிடித்த பாடலான ‘வைஷ்ணவ் ஜன தோ தேன் ககியே?’-ன் சர்வதேச வடிவத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். இது, 5.34 நிமிடம் ஓடும் வீடியோவாக தயாரிக்கப்பட்டு உள்ளது. இப்பாடலை 124 நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பாடியுள்ளனர்.

மேலும், மகாத்மா காந்தி உருவம் பொறித்த 7 அஞ்சல் தலைகளையும் மோடி வெளியிட்டார். இவை, வட்ட வடிவ அஞ்சல் தலைகள் ஆகும். சுதந்திர இந்தியாவில் இத்தகைய அஞ்சல் தலைகளை வெளியிடுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: Modi