சென்னை பல்கலைக்கழக தடகள போட்டி – காருண்யா, ஸ்ரீஜா புதிய சாதனை

சென்னை பல்கலைக்கழக உடற்கல்வியியல் துறை சார்பில் ஏ.எல்.முதலியார் பொன்விழா நினைவு 51-வது தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 66 கல்லூரிகளை சேர்ந்த 1,200 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

2-வது நாளான நேற்றும் 2 புதிய போட்டி சாதனைகள் படைக்கப்பட்டன. பெண்களுக்கான வட்டு எறிதலில் எம்.ஓ.பி.வைஷ்ணவா வீராங் கனை காருண்யா 43.50 மீட்டர் தூரம் எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதில் கடந்த ஆண்டு (2017) எம்.ஓ.பி.வைஷ்ணவா வீராங்கனை நித்யா 40.88 மீட்டர் எறிந்ததே சாதனையாக இருந்தது. இதேபோல் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எம்.ஓ.பி. வைஷ்ணவா வீராங்கனை ஸ்ரீஜா 11.7 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 2001-ம் ஆண்டில் ஜே.பி.ஏ.எஸ். வீராங்கனை கே.என்.பிரியா 11.9 வினாடியில் கடந்து படைத்து இருந்த சாதனையை ஸ்ரீஜா நேற்று தகர்த்தார். ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நிதின் (ஆர்.கே.எம்.விவேகானந்தா) 10.4 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து, 2008-ம் ஆண்டில் எம்.சி.சி. வீரர் பிரசாத் (10.4 வினாடி) படைத்து இருந்த சாதனையை சமன் செய்தார்.

ஆண்களுக்கான குண்டு எறிதலில் அஜித் குமார், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ராஜேஷ் (இருவரும் டி.ஜி.வைஷ்ணவா), ஈட்டி எறிதலில் அருண்குமார், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹரி கிருஷ்ணன் (இருவரும் எம்.சி.சி.) ஆகியோர் தங்கப்பதக்கத்தை வென்றனர்.

பெண்களுக்கான குண்டு எறிதலில் மீனாட்சி, 100 மீட்டர் தடை ஓட்டத்தில் கனிமொழி (இருவரும் எம்.ஓ.பி.வைஷ்ணவா), 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எக்னேஷ், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மரிய ராசாத்தி (இருவரும் எத்திராஜ்), ஈட்டி எறிதலில் ஹேமமாலினி (எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா) ஆகியோர் தங்கப்பதக்கத்தை பெற்றனர். நேற்றைய பந்தயங்கள் முடிவில் ஆண்கள் பிரிவில் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியும், பெண்கள் பிரிவில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியும் பதக்க வேட்டையில் முன்னிலை வகிக்கின்றன. இன்று கடைசி நாள் பந்தயம் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools