X

சென்னை பல்கலைக்கழக தடகள போட்டி – ரகுராம், பிருந்தா புதிய சாதனை

சென்னை பல்கலைக்கழக உடற்கல்வியியல் துறை சார்பில் ஏ.எல்.முதலியார் பொன்விழா நினைவு 51-வது தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. மத்திய அமலாக்கத்துறை உதவி இயக்குனர் டெர்ரான்ஸ் ரோட்ரிஜோ போட்டியை தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் வி.மகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நாளை வரை நடைபெறும் இந்த போட்டியில் 66 கல்லூரிகளை சேர்ந்த 1,200 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாளான நேற்று 2 புதிய போட்டி சாதனைகள் படைக்கப்பட்டன. பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி வீராங்கனை எம்.பிருந்தா 47.73 மீட்டர் தூரம் எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதற்கு முன்பு 2002-ம் ஆண்டில் எத்திராஜ் வீராங்கனை சாந்தி 46.96 மீட்டர் தூரம் எறிந்ததே சாதனையாக இருந்தது. ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எம்.சி.சி. வீரர் எம்.ரகுராம் 1 நிமிடம் 52.2 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 2016-ம் ஆண்டில் லயோலா கல்லூரி வீரர் வெள்ளையதேவன் 1 நிமிடம் 53.1 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே முந்தைய சாதனையாக இருந்தது. சாதனை படைத்த பிருந்தா, ரகுராம் ஆகியோர் செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளர் நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.

பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எம்.ஐஸ்வர்யாவும், உயரம் தாண்டுதலில் வினோதாவும், டிரிபிள் ஜம்ப்பில் ஆர்.ஐஸ்வர்யாவும், 5 கிலோ மீட்டர் நடைப்பந்தயத்தில் லாவண்யாவும் (4 பேரும் எம்.ஓ.பி.வைஷ்ணவா), 400 மீட்டர் தடை ஓட்டத்தில் திவ்யாவும் (அண்ணா ஆதர்ஷ்), 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சுஷ்மிதாவும் (எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா) முதலிடம் பிடித்தனர்.

ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அஜய் தர்மாவும், போல்வால்ட்டில் சந்தோஷ்குமாரும், டிரிபிள்ஜம்ப்பில் அரவிந்தும், 20 கிலோ மீட்டர் நடைப்பந்தயத்தில் வெற்றிவேலும் (4 பேரும் டி.ஜி.வைஷ்ணவா), சங்கிலி குண்டு எறிதலில் முரளிதரனும், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் கெவின் குமார் ராஜூம் (2 பேரும் லயோலா) தங்கம் வென்றனர்.