செக்கச்சிவந்த வானம்- திரைப்பட விமர்சனம்
என்ன தான் தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்தாலும் மணிரத்னம் இயக்கும் படம் என்றாலே ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. அப்படி ஒரு எதிர்ப்பார்ப்பை விடவும் அதிகமாகவே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இந்த ‘செக்கச்சிவந்த வானம்’ எப்படி என்பதை பார்ப்போம்.
சென்னையில் மரியாதை மிக்க பெரிய தாதாவாக இருக்கும் பிரகாஷ்ராஜுக்கு அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு ஆகிய மூன்று பிள்ளைகள், ஒரு மகள் இருக்கிறார்கள். இதில் மூத்தவர் அரவிந்த்சாமி, அப்பா சொல்லும் வேலையை செய்வதோடு, அப்பாவைப் போலவே அடிதடி என்று வாழ்கிறார். இரண்டாவது மகனான அருண் விஜய், துபாயில் தனது மனைவி குழந்தைகளுடன் வாழ, கடைக்குட்டி சிம்பு செர்பியா நாட்டில் காதலியுடன் வாழ்கிறார். இந்த இரண்டு பிள்ளைகளும் அப்பாவிடம் இருந்து தள்ளி இருந்தாலும் அப்பா இடத்தை பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இதற்கிடையே, பிரகாஷ்ராஜை ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சிக்க, அவர்கள் யார் என்பதை கண்டறியும் வேலையில் அவரது மூன்று மகன்களும் இறங்குவதோடு, அப்பாவின் இடத்திற்காக மூன்று பேரும் ஒருவருக்கொருவர் உயிரையும் எடுக்கும் அளவுக்கு மோதிக்கொள்ள, இறுதியில் யார் அந்த இடத்தை பிடித்தார்கள், தங்களது அப்பாவை கொல்ல முயன்ற நபரை கண்டுபிடித்தார்களா இல்லையா, என்பது தான் படத்தின் மீதிக்கதை.
அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ் என படத்தில் பெரிய நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும், அனைவருக்கும் சமபங்கு கொடுத்து திரைக்கதை அமைத்த விதம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
தளபதி, நாயகன் என்று கேங்ஸ்டர் கதைகளில் ஜெயித்த மணிரத்னம், வேறு ஒரு பாணியில் இந்த கேங்க்ஸ்டர் கதையை கையாண்டிருக்கிறார். போட்டி, மோதல் என்று எதிர் தரப்பினருடன் மோதம் கேங்க்ஸ்டர் கதைகளில் இருந்து சற்று வேறுபட்டு, ஒரு கேங்க்ஸ்டர் குடும்பத்திற்குள் நீயா? நானா? மோதல் ஏற்பட்டால், அது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை காதல், செண்டிமெண்ட் என அனைத்து எமோஷன்களையும் கலந்து இப்படத்தின் திரைக்கதையை மணிரத்னம் அமைத்திருக்கிறார்.
படத்தின் முக்கிய தூனாக இருக்கும் அரவிந்த்சாமி, அப்பாவின் சொல் பேச்சு கேட்கும் பிள்ளையாக, அதே சமயம் அதையே தனது மனமாற்றத்திற்கான காரணமாகவும் கொண்டு அவர் செய்யும் சில விஷயங்கள் தான் படத்தின் திருப்பு முனையாக இருப்பதால், தனது கதாபாத்திரத்தை ரொம்ப கவனமாக கையாண்டிருக்கிறார்.
அருண் விஜய் ஸ்டைலிஸாக மட்டும் இல்லாமல் நடிப்பையும் ஸ்டைலிஸாக வெளிக்காட்டுவதோடு, ஆக்ஷன் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.
சிம்புவை பிடிக்காதவர்களுக்கு கூட இந்த படத்தை பார்த்தால் அவரை பிடித்து விடும். அந்த அளவுக்கு அடக்கி வாசித்திருக்கும் சிம்பு, “நான் யார் மீது அன்பு வைத்தாலும் பிரிந்துவிடுகிறார்கள், அதனால் தான் விலகியே இருக்கேன்” என்று வசனம் பேசி கைதட்டல் வாங்குகிறார். அம்மா செண்டிமெண்ட், காதல், குரோதம் என பல ஏரியாக்களில் பர்பாமன்ஸ் செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுகிறார்.
மூன்று சகோதரர்களில் முத்தவரான அரவிந்த்சாமியின் பள்ளி தோழனாக போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, மணிரத்னம் படத்திற்காக தன்னை எந்தவிதத்திலும் மாற்றிக்கொள்ளாமல், தனது பாணியிலேயே அசத்தியிருக்கிறார். ஆரம்பக் காட்சியில் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் பேசுவது முதல், சிம்பு, அருண் விஜய், அரவிந்த்சாமி என அனைத்து கதாபாத்திரங்களுடன் பயணிப்பது என்று, தான் வரும் இடங்களில் எல்லாம், தனது டைமிங் டயலாக் டெலிவரியால் சிரிக்க வைக்கிறார்.
நான்கு முக்கிய நடிகர்களில் ஐந்தாவது நபராக ஜோதிகாவின் வேடமும் திரைக்கதையில் சில இடங்களில் நம்மை கவர்ந்தாலும், அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா ஆகியோர் பெரிதாக கவரவில்லை. நட்சத்திர அந்தஸ்த்துக்காக மட்டுமே அவர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பிரகாஷ்ராஜ், ஜெயசுதா ஆகியோரது நடிப்பு தனித்து நிற்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். பாடல்கள் அனைத்தும் மாண்டேஜாக வந்தாலும், பாடல்கள் வரும் இடங்கள் எல்லாமே ரசிக்க வைக்கிறது. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாக இருப்பதோடு, படமே ரிச்சாக இருக்கிறது.
படத்தின் ஆரம்பத்திலேயே கதைக்குள் சென்றுவிடுவதால் முதல் பாதி படம் ஜெட் வேகத்தில் பரபரப்பாக நகர்கிறது. இரண்டாம்பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும், வசனங்கள் அதுபோன்ற இடங்களை சரி செய்து படத்தை ரசிக்க வைத்து விடுகிறது.
மணிரத்னம் மற்றும் சிவ ஆனந்தின் வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. நடிகர்களின் கதாபாத்திரத் தன்மையோடு மட்டும் அல்லாமல் அவர்களது ரியல் கேரக்டரோரும் தொடர்புடையதாக வரும் வசனங்கள் கைதட்டல் பெருவதோடு, அவ்வபோது சிரிக்கவும் வைக்கிறது.
மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை வைத்து குழப்பமில்லாமல் திரைக்கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் மணிரத்னம், ஆரம்பத்திலேயே கதையை சொல்லிவிட்டாலும், விறுவிறுப்பு குறையாமல் திரைக்கதையை நகர்த்தி வருபவர், க்ளைமாக்ஸில் யாரும் எதிர்ப்பார்க்காத ட்விஸ்ட்டோடு படத்தை முடித்து, “ஐம் பேக்” என்று கூறுகிறார்.
மொத்தத்தில், இந்த ‘செக்கச்சிவந்த வானம்’ மூலம் இயக்குநர் மணிரத்னம், தனது தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
-ஜெ.சுகுமார்