சத்தீஸ்கர் தேர்தல்- எம்.எல்.ஏக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ராகுல் காந்தி

முதல்-மந்திரி ராமன்சிங் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வரும் சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது.

மொத்தம் உள்ள 88 இடங்களில் கடந்த மாதம் 12-ந் தேதி முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கும் மீதம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.

வருகிற 11-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கிடையே சத்தீஸ்கரில் காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்றும், ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அந்த கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் பல்வேறு தொகுதிகளை பார்வையிட்ட பின்பு காங்கிரஸ் தலைவர்கள் இது தொடர்பாக மேலிடத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநில கட்சி விவகாரங்களை கவனிக்கும் மேலிட பொறுப்பாளர் பி.எல்.புனியா, காங்கிரஸ் கட்சிக்கு 50 இடங்கள் கிடைக்கும், மெஜாரிட்டி இடங்களுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக மேலிடத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

முதல்-மந்திரி வேட்பாளராக கருதப்படும் அஜித்ஜோகி இதர பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளை கவரும் வகையில் செயல்பட்டுள்ளார். இது காங்கிரசுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதாக தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சத்தீஸ்கரில் தொகுதி வாரியாக வெற்றி வாய்ப்பு குறித்து தேர்தல் பொறுப்பாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

இதையடுத்து அவர் மாநில தேர்தல் பொறுப்பாளர்களுக்கு பல அதிரடி உத்தரவுகள் பிறப்பித்துள்ளார். தேர்தல் முடிவுகள் முழுவதும் வெளியாகும் வரை யாரும் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 தேர்தல்களில் தொடர்ச்சியாக காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்துள்ளது. எனவே இந்த முறை ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கோவா, மணிப்பூர் மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா இழுத்ததுபோல் இங்கு நடைபெறக் கூடாது என்பதில் முனைப்பாக உள்ளது.

எனவே தேர்தல் முடிவு வெளியாகத் தொடங்கியதும் வெற்றி பெறும் எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கவும் ராகுல் உத்தரவிட்டுள்ளார்.

உடனடியாக அவர்களை ஒரே இடத்தில் தங்க வைத்து பாதுகாக்க வேண்டும், அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும், தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே யார்-யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதோ அவர்களை இப்போதே கண்காணித்து பாதுகாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஓட்டு எண்ணிக்கையின்போது முறைகேடு நடைபெறாமல் இருக்க காங்கிரஸ் ஏஜெண்டுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools