பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தேர்தல் செலவுகளுக்காக 1 லட்சம் கோடி ரூபாய் பணத்தை ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு கேட்டு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும், தனக்கு வேண்டிய நபர்களை ரிசர்வ் வங்கியின் முக்கிய பதவிகளில் மத்திய அரசு பணி அமர்த்தி இருப்பதாகவும், அதன் மூலம் வரும் 19-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் தனக்கு சாதகமான முடிவுகளை எடுக்க வைத்து, ரிசர்வ் வங்கியைக் கைப்பற்ற பா.ஜ.க. அரசு முயல்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் பணம் கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் பதவி விலக வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிபந்தனைகளில் எது நடந்தாலும் அது ரிசர்வ் வங்கியின் புனிதத்தை சீர்குலைக்கும் எனவும் முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.