ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது – பிரதமரிடம் கோரிக்கை வைத்த முதல்வர் பழனிச்சாமி
டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, அரசு திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். மேலும் தமிழகம் சார்பில் ஒரு மனுவை பிரதமரிடம் வழங்கினார். அதில், பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு மற்றும் தமிழகம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினேன். எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டை நினைவு கூரும் விதமாக, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன் ரெயில் நிலையம் என பெயர் சூட்டவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டள்ளது. அதையும் நிறைவேற்றித் தரவேண்டும் என பிரதமரிடம் கூறியுள்ளேன்.
தமிழகத்தின் திட்டங்களின் நிலை குறித்து பிரதமரிடம் விளக்கி தமிழகத்துக்கு தேவையான நிதி அளிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளேன். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கும்படி வலியுறுத்தினேன். மதுரை எய்மஸ் மருத்துவமனையை விரைந்து அமைத்திட நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினேன். கர்நாடக அரசின் மேகதாது நீர்த்தேக்க திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என கேட்டுக்கொண்டேன். சென்னை மாநகர நிரந்தர வெள்ளத்தடுப்பு மையம் அமைக்க தேவையான ரூ.4445 கோடி வழங்க வலியுறுத்தினேன்.
குமரியில் நிரந்தர கடற்படை தளம், சேலத்தில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன். கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் கூறியிருக்கிறார்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.