ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 2வது டி20 – நாளை நடைபெறுகிறது

3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரில் பிரிஸ்பேனில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 ரன்னில் தோற்று 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

இதனால் நாளை நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தோற்றால் தொடரை இழந்துவிடும். முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாகவே ஆடினார்கள். மழை விதியால் பாதிப்பு ஏற்பட்டது. இதை சரி செய்யும் வகையில் இந்திய வீரர்கள் நாளை முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

நாளைய போட்டிக்கான அணியில் விராட்கோலி மாற்றம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குணால் பாண்ட்யா ரன்களை வாரி கொடுத்தார். இதேபோல கலீல் அகமதுவும் ரன்களை விட்டுக்கொடுத்தார். இதனால் இருவரில் ஒருவர் கழற்றிவிடப்பட்டு யசுவேந்திர சஹாலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கருதப்படுகிறது. பேட்டிங் வரிசையில் பெரும்பாலும் மாற்றம் இருக்காது.

ஆஸ்திரேலிய அணி நாளைய ஆட்டத்திலும் இந்தியாவை வீழ்த்தி 20 தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் மேக்ஸ்வெல், கிறிஸ்லின், கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆகியோரும், பந்துவீச்சில் ஆடம் ஜம்பா, ஸ்டோனிஸ ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். ஸ்டோனிஸ் ஆல்ரவுண்டர் வரிசையில் ஜொலிக்கிறார்.

நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1.20 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ், சோனி டென் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools