ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டி – இந்தியா வெற்றி

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

ஆரோன் பிஞ்ச, டி ஆர்கி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சிறப்பாக ஆடிய இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். ஆரோன் பிஞ்ச் 28 ரன்னிலும், ஆர்கி ஷார்ட் 33 ரன்னிலும் வெளியேறினர். மேக்ஸ்வெல் 13 ரன்னிலும், பென் மெக்டெர்மோட் டக் அவுட்டாகி வெளியேறினர்.

கடைசி கட்டத்தில் மார்கஸ் ஸ்டாய்னிஸ், கவுல்டர்-நைல் அதிரடியாக ஆடினர். இதனால், ஆஸ்திரேலியா 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது. ஸ்டாய்னிஸ் 25 ரன்னுடனும், நாதன் கவுல்டர் நைல் 13 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய அணி சார்பில் குருணால் பாண்டியா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளுக்கு விரட்டினர். இதனால் இந்த ஜோடி அரை சதத்தை கடந்தது.

அணியின் எண்ணிக்கை 67 ஆக இருக்கும்போது ஷிகர் தவான் 41 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து ரோகித் சர்மாவும் 23 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் ஆடினார். ஆனாலும் லோகேஷ் ராகுல் 14 ரன்னிலும், ரிஷப் பந்த் டக் அவுட்டிலும் வெளியேற இந்தியாவுக்கு நெருக்கடி ஆரம்பித்தது.

அடுத்து இறங்கிய தினேஷ் கார்த்திக் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய விராட் கோலி 34 பந்தில் அரை சதம் அடித்தார். இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த வெற்றி மூலம் டி 20 தொடரை இந்தியா 1 – 1 என சமன் செய்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools