மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டி வருகிற 6-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 193 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். அவர்களுடன் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், நிர்வாகிகள், மருத்துவர்கள் என்று 112 பேரும் உடன் செல்கிறார்கள்.
தொடக்க விழாவிற்கு இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் தமிழக தடகள வீரர் மரியப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த மாரியப்பன் 2016-ம் ஆண்டு பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று வரலாறு படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, முதற்கட்டமாக ஜகர்தாவுக்கு சென்ற இந்திய குழுவினருக்கு ஆசிய போட்டிக்கான விளையாட்டு கிராமத்தில் நுழைய முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. சில மணி நேர தவிப்புக்கு பிறகே அவர்கள் உள்ளே செல்ல போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதி வழங்கினர்.
விளையாட்டு கிராமத்தில் நமது வீரர், வீராங்கனைகள், நிர்வாகிகள் தங்குவதற்குரிய கட்டணம் மற்றும் போட்டி கட்டணம், பதிவு கட்டணம் என்று இந்திய விளையாட்டு அமைச்சகம் ஏறக்குறைய ரூ.1¾ கோடி செலுத்த வேண்டி உள்ளது. அந்த தொகையை செலுத்தாததாலேயே இந்த சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த தொகையை இன்றுக்குள் செலுத்தாவிட்டால் மறுபடியும் இது போன்ற சிக்கல் ஏற்படலாம் என்று இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி துணைத்தலைவர் குர்ஷரன் சிங் தெரிவித்தார்.