X

சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கும் தீர்ப்பை வரவேற்கும் ‘அருவி’ நடிகை!

சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன் என்று நடிகை அதிதிபாலன் கூறினார்.

ஈரோட்டில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திரைப்பட நடிகை அதிதி பாலனுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ஈரோட்டிற்கு முதல் முதலாக நான் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் நடித்த அருவி படம் சிறந்த வெற்றியை பெற்றுள்ளது. வக்கீலுக்கு நான் படித்திருந்தாலும் அதற்கான பயிற்சியை மேற்கொள்ளவில்லை. அதற்குள் சினிமா வாய்ப்பு வந்ததால் நடிக்க தொடங்கி விட்டேன். சமூக விழிப்புணர்வு படங்களில் நடிக்குமாறு என்னை சந்திப்பவர்கள் கூறி வருகிறார்கள். அதற்கான கதையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அதுபோல் மக்கள் மத்தியில் எளிதில் சென்றடையும் கதாபாத்திரத்தை நான் தேர்ந்தெடுத்து நடிப்பேன்.

அருவி படம் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கக்கூடாது என்ற கருத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்தில் நடிப்பதற்கு 4 மாதங்களுக்கு முன்பு டாக்டர்கள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்து கலந்துரையாடி உள்ளேன். இதேபோல் திருநங்கைகளிடமும் பழகி உள்ளேன்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்களை செல்ல அனுமதிக்கும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறேன். அதில் பாரம்பரியம் தொடர்பாக சில சிக்கல்கள் இருந்தாலும், பெண்களுக்கு கிடைத்த வாய்ப்பாக கருதுகிறேன். நான் சிறுவயதில் 3 முறை சபரிமலைக்கு சென்று வந்து உள்ளேன். மீண்டும் சபரிமலைக்கு செல்ல வாய்ப்பு கிடைத்து உள்ளதாக நினைக்கிறேன். இதேபோல் ஓரின சேர்க்கை குற்றம் கிடையாது. தகாத உறவும் குற்றமில்லை போன்ற தீர்ப்புகளும் வரவேற்கத்தக்கது.

இவ்வாறு நடிகை அதிதி பாலன் கூறினார்.

Tags: Cinema news