அருண் ஜெட்லிக்கு ப.சிதம்பரம் பதிலடி

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இணைக்க மத்திய அரசு வற்புறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். இந்த பேட்டி இந்திய அரசியலில் புயலை கிளப்பியது.

ஆனால், விமானத்தை தயாரிக்கும் டசால்ட் நிறுவனமோ, தங்களுக்கு தேவையான நிறுவனத்தை தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம் என விளக்கம் அளித்திருந்தது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். ரபேல் ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும், இது பற்றி பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், ராகுல் காந்தி மற்றும் சில கட்சிகள் குற்றம் சாட்டுவதால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்றும் ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடையும் என்றும் நிதி மந்திரி அருண் ஜெட்லி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்நிலையில், ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக நிதி மந்திரிக்கு முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.

‘உண்மைக்கு இரண்டு முகங்கள் இருக்க முடியாது என்கிறார் நிதி அமைச்சர் ஜெட்லி. முற்றிலும் சரி. எந்த முகம் உண்மை முகம் என்று எப்படி கண்டு பிடிப்பது? இரண்டு வழிகள் தாம் இருக்கின்றன. ஒன்று, விசாரணைக்கு உத்தரவிடுவது. இரண்டு, நாணயத்தைச் சுண்டி பூவா, தலையா என்று பார்ப்பது.

நிதி அமைச்சர் இரண்டாவது வழியை விரும்புகிறாரோ?. ரபேல் விமான உடன்பாட்டில் தவறு நடந்திருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டு பிடிப்பதற்கு விசாரணையைத் தவிர வேறு வழியில்லை’ என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools