Tamilசெய்திகள்

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி மீது பாலியல் புகார் – எப்.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட டிரம்ப்

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு டிரம்பால் நியமிக்கப்பட்டுள்ள கவனாக் மீது 2 பெண்கள் செக்ஸ் புகார் எழுப்பி உள்ளனர். ஆனால் தன் மீதான செக்ஸ் புகார்களை அவர் மறுத்தார். நான் எந்தப்பெண்ணுடனும் தவறாக நடந்தது கிடையாது என அவர் கூறினார்.

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த அந்தோணி கென்னடி ஓய்வு பெற்றதால் புதிய நீதிபதியாக பிரெட் கவனாக்கை நியமிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஜூலை மாதம் அறிவித்தார். 53 வயதான இவரது நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, பிரெட் கவனாக் மீது கிறிஸ்டின் பிளாசே போர்டு என்ற பெண்ணும், டெபோரா ரமிரெஸ் என்ற பெண்ணும் செக்ஸ் புகார்களை எழுப்பினர்.

தன்னிடம் 36 ஆண்டுகளுக்கு முன்பு பிரெட் கவனாக் அத்துமீறி நடந்து கொண்டதாக கிறிஸ்டின் பிளாசே போர்டும், 25 ஆண்டுகளுக்கு முன் தன்னிடம் பிரெட் கவனாக் பாலியல் ரீதியில் தவறாக நடந்ததாக டெபோரா ரமிரெசும் குற்றம் சுமத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பாலியல் புகார்கள் தொடர்பாக அமெரிக்க மத்திய புலனாய்வு படையினரின் (எப்.பி.ஐ.) விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சி வலியுறுத்தி வருகிறது.

இதற்கிடையே, ஜனநாயக கட்சியை சேர்ந்த 10 உறுப்பினர்களும், குடியரசு கட்சியை சேர்ந்த 11 உறுப்பினர்களும் அடங்கிய செனட் குழு பிரெட் கவனாக் மற்றும் அவர் மீது பாலியல் புகார் அளித்த பெண்களிடம் கடந்த வியாழன் அன்று விசாரணை நடத்தியது.

அந்த விசாரனையில், நான் யார் மீதும் செக்ஸ் ரீதியில் அத்துமீறி நடந்தது கிடையாது. பள்ளிக்கூடத்திலும் சரி, வேறு எப்போதும் சரி. நான் எப்போதுமே பெண்களை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தி வந்து இருக்கிறேன். எனது வாழ்நாளில் என்னோடு வந்து இருப்பவர்களை கேட்டால் தெரியும் நான் ஒரு அப்பாவி என கவனாக் மிகவும் உருக்கமான முறையில் கூறினார்.

இந்நிலையில், பிரெட் கவனாக் மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க எப்.பி.ஐ விசாரணைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஆனால், இந்த விசாரணை மிகவும் விரைவாக அதாவது ஒரு வார காலத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பிரெட் கவனாக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக டிரம்ப் பரிந்துரை செய்ததற்கு செனட் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. டிரம்ப்பின் பரிந்துரைக்கு ஆதரவாக 11 உறுப்பினர்களும், எதிராக 10 உறுப்பினர்களும் வாக்களித்ததால் பிரெட் கவனாக் நியமனத்தில் ஏற்பட்ட தடை சற்றே விலகியுள்ளது.

செனட் குழுவின் ஒப்புதலை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் முழு செனட் சபையில் பிரெட் கவனாக் நியமனத்திற்கு ஒப்புதல் பெறுவதற்கான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. எப்.பி.ஐ விசாரணை அறிக்கையை அடிப்படையாக வைத்தே இந்த வாக்கெடுப்பில் கவனாக் நியமனம் வெற்றி பெருமா ? பெறாதா ? என்பது தீர்மாணிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *