ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் வடசென்னை படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷின் தைரியமான கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.
இந்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் அறிமுகமாகும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. விஜய் தேவரகொண்டாவுடன் எடுத்த செல்ஃபியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா, விஜய் தேவரகொண்டாவுடன் எனது முதல் தெலுங்கு படத்தின் பூஜை இன்று நடைபெற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கும் இந்த படத்தை கிரந்தி மாதவ் இயக்குகிறார். இந்தப் படத்தில் ராஷி கண்ணா மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். வழக்கமான கதாநாயகி கதாபாத்திரமாக அல்லாமல் நடிப்பதற்குச் சவாலான வித்தியாசமான கதாபாத்திரம் ஐஸ்வர்யாவுக்கு தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நோட்டா மூலம் விஜய் தேவரகொண்டா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா என இரு நாயகிகளுமே தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்களாக இருப்பதால் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படம் உருவாக உள்ளது.