இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆப்பிரிக்க இளம் கோடீஸ்வரர் கடத்தல்!
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவை சேர்ந்த இளம் கோடிஸ்வர் முகமது டியூஜி. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவரது சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி ஆகும்.
தனது பரம்பரை தொழிலான சில்லரை வியாபாரத்தை முகமது டியூஜி, 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் நடைபெறும் தொழில் சாம்ராஜ்யமாக மாற்றியுள்ளார். விவசாயம், போக்குவரத்து, உணவு, உடைகள், மதுபானங்கள் மற்றும் சமையல் எண்ணெய் உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்களை ஆப்ரிக்கா முழுமைக்கும் இவர் நடத்தி வருகிறார்.
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட ஆப்ரிக்க பணக்காரர்கள் பட்டியலில் முகமது டியூஜி 17-ம் இடம் பிடித்திருந்தார். அந்த பத்திரிக்கை ஆப்ரிகாவில் இளம் கோடிஸ்வரர் என இவரை புகழ்ந்திருந்தது. தான்சானியாவில் பணக்காரர்கள் பட்டியலில் முகமது டியூஜி முதலிடம் பிடித்திருந்தார்.
இந்நிலையில், முகமது டியூஜி மர்மநபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியாவில் உள்ள தார் இ ஸலாம் எனும் நகரில் உள்ள சொகுசு விடுதியில் இருந்து அவர் கடத்தப்பட்டதாகவும், முகமூடி அணிந்து துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டபடி வந்த கடத்தல்காரர்களால் அவர் கடத்தி செல்லப்பட்டதாகவும் அந்நகரின் தலைமை போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தார் இ ஸலாம் கவர்னர் கூறுகையில், ‘சொகுசு விடுதியில் உடல் பயிற்சி முடித்துவிட்டு வெளியே வந்த அவரை துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளனர். 2 வாகனங்களில் கடத்தல்காரர்கள் வந்துள்ளனர், அவர்கள் வெள்ளையர்கள் என தெரியவந்துந்துள்ளது. இந்த சம்பவத்தின் போது முகமது டியூஜியுடன் பாதுகாவலர்கள் யாரும் இல்லை.
இது தொடர்பாக சந்தேகப்படும் நபர்கள் சிலரை ஏற்கெனவே கைது செய்து விசாரித்து வருகிறோம். முகமது டியூஜி கண்டுபிடித்து மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது’ என அவர் தெரிவித்தார்.