X

ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டும் லதா ரஜினிகாந்த்!

லதா ரஜினிகாந்த் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, ‘குழந்தைகள் நலனுக்காக தயா பவுண்டேஷன் அமைப்பை தொடங்கி நலத்திட்ட பணிகள் செய்து வருகிறோம். ரோடு ஓரங்களில் வசிப்பவர்களின் பல குழந்தைகள் காணாமல் போய் இருக்கின்றன. கடத்தப்பட்டு இருக்கலாம். அவர்கள் நிலைமை என்ன ஆனது? என்று தெரியவில்லை. எவ்வளவு குழந்தைகள் காணாமல் போய் உள்ளன என்ற விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.

தெருவோர சிறார்களுக்கு கல்வி, மருத்துவ வசதிகள் அளிக்கிறோம். ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறோம். குடும்ப பிரச்சினைகளுக்காக பெற்றோர்கள் குழந்தைகளை கொல்வது வேதனை அளிக்கிறது. அப்படிப்பட்ட பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும், குழந்தைகளை நாங்கள் தத்தெடுத்து வளர்க்கவும் தயாராக உள்ளோம்.

காணாமல் போன குழந்தைகள் பற்றி கோர்ட்டில் வழக்கு உள்ளது. இனிமேல் குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க அரசும், தொண்டு நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதிலும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந் தேதியில் இருந்து 4-ந் தேதி வரை குழந்தைகள் கலை விழாவை சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் நடத்த உள்ளோம். இது குடும்ப விழாவாக நடைபெறும். குழந்தைகளின் இசை, நடன நிகழ்ச்சிகள், திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். மீ டூ பற்றி பேசுகிறார்கள். எங்குமே தவறு நடக்கக் கூடாது என்பது எனது கருத்து.

இவ்வாறு லதா ரஜினிகாந்த் கூறினார்.