ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை கழகத்தில் 7 அடி உயரம் கொண்ட ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலை கடந்த 24.2.18 அன்று வைக்கப்பட்டது.
இந்த சிலையை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த சிலை ஜெயலலிதா முகசாயலில் இல்லை என்று பலர் குறை கூறினர். சிலையை வடிவமைத்த ஆந்திராவை சேர்ந்த சிற்பி பிரசாத் கூறுகையில் தனக்கு போதுமான காலஅவகாசம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து இருந்தார்.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு புதிய சிலை அமைக்க முடிவு செய்து ஆந்திராவை சேர்ந்த ராஜ்குமார் என்ற சிற்பியிடம் சிலையை வடிவமைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் ஜெயலிதாவின் சிலையை தத்ரூபமாக வடிவமைத்து வழங்கி உள்ளார்.
இந்த சிலை இப்போது ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சிலை நிறுவும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதாவுக்கு புதிய சிலை வைக்கப்படுவதால் புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆருக்கும் புதிய சிலை வைக்க முடிவெடுத்துள்ளனர். இதற்காக எம்.ஜி.ஆர். சிலையும் ஆந்திராவில் தயாராகி வருகிறது.
இந்த சிலையும் இன்னும் ஓரிரு நாளில் தலைமை கழகத்துக்கு வந்து விடும் என தெரிகிறது.
எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா இருவரின் சிலைகளையும் புதிதாக நிறுவி ஒரே நாளில் திறப்பு விழா நடத்த தலைமை கழகம் முடிவெடுத்துள்ளது. அனேகமாக 28-ந்தேதி சிலை திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான முன்னேற்பாடுகளை அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். #ADMK