பிச்சைக்காரர்களுக்கு இலவசம் தேவை என்று கமல்ஹாசன் கூறியதற்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அ.தி.மு.க. நாளேடான நமது அம்மா வில் வெளியாகியுள்ள கட்டுரை வருமாறு:
பிச்சைக்காரர்களுக்குத் தான் இலவசம் தேவை என்கிறாரே கமல்ஹாசன். அப்படியென்றால் ஊனமுற்ற ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்குகிறாரே அவர், அது எதற்காக?
மக்களால் அரசுக்கு வருவாயாக வழங்கப்படுகிற வரிப்பணம், அவர்களுக்கான மக்கள் நலத்திட்டங்களாகி மீண்டும் அவர்களுக்கே உரிய பலன்களாக, திரும்பக் கிடைக்கிறபோது, அதனை ஒருபோதும் இலவசம் என்று சொல்லக்கூடாது என உத்தரவிட்டு அவற்றிற்கு விலையில்லா பொருட்கள் என்கிற பெயரைச் சூட்டியவர் ஈகைக்கும், வாகைக்கும் இலக்கணம் வகுத்த எங்கள் அம்மா.
இதையெல்லாம் உள் வாங்கிக் கொள்ளாத உள்நோக்க உளறல் நாயகன். ஈரிலை அரசு மீது தொடர்ந்து வன்மத்தைக் கக்குவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
எங்கள் அம்மாவின் அரசு, கல்வியை, மருத்துவத்தை, ஏழை, எளியோருக்கு விலையில்லாமல் தொடர்ந்து பல்லாண்டுகளாக வழங்குகிறது.
அதன் மூலம் கல்வி பயின்று உயர்ந்த பதவிகளால் உச்சம் தொட்டு நிற்பவர்களை எல்லாம் கமலின் கருத்து பிச்சைக்காரர்கள் என்கிறதா?
தொடர்ந்து மூன்றாண்டுகள் இந்தியாவிலேயே உணவு தானிய உற்பத்தியில் தமிழகமே முதலிடம் என்கிற ஹாட்ரிக் சாதனையைப் புரிவதற்கு விவசாயப் பெருமக்களுக்கு விதை, உரம் உள்ளிட்ட இடு பொருட்களை எல்லாம் தமிழக அரசு இலவசமாக தந்து உழவர்களை ஊக்க மூட்டுகிறதே, இதனையெல்லாம் விவசாயிகள் பெறுகிற பிச்சை என்கிறாரா? வில்லங்க ரூப கமல்ஹாசன்.
சரி அதெல்லாம் போகட்டும், “கட்சி தொடங்கிய நீங்க, கட்சியை நடத்துவதற்கு பணத்திற்கு என்ன செய்வீங்க” என்று பத்திரிகையாளர் கேட்டபோது, “எனக்கான நிதியை என் கட்சித் தொண்டர்கள் தருவார்கள்” என்று இலவசத்திற்கு தன் தொண்டர்களிடமே துண்டு விரிக்கிற திருவாளர் கமல்ஹாசனை வேண்டுமானால், அரசியல் பிச்சைக்காரர் என்று அழைக்கலாம்.
தாங்கள் அமைத்த அரசாங்கத்திடமிருந்து நலத் திட்டங்களை பெறுபவர்கள் ஆட்சி அதிகாரத்தின் பங்காளர்களே தவிர, அவர்கள் கையேந்திகள் அல்ல என்பதை கருத்துக் குருடர் கமல்ஹாசன் உணர்ந்து கொள்வது உத்தமம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.