அறிவியல் ஆசிரியர், அணு விஞ்ஞானி, குடியரசுத் தலைவர், கனவு நாயகன் என பன்முகங்கள் கொண்டவர் ஏபிஜே அப்துல் கலாம். குழந்தைகள், இளைஞர்களால் எப்போதும் கொண்டாடப்படக் கூடியவர்.
இவரது முழுப்பெயர் அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம். இவர் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி ஜைனுலாப்தீன்- ஆஷியம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.
இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார். ஜனாதிபதியாக பதவி ஏற்குமுன், அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக திட்ட இயக்குநராக இருந்த போது, எஸ்.எல்.வி III ராக்கெட்டைக் கொண்டு, ரோகினி-I என்ற துணைக்கோளை விண்ணில் ஏவச் செய்தார்.
1998ஆம் ஆண்டு மே 11ல் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி, உலக நாடுகள் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 2002ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்வானார்.
கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். தென் கொரியாவில் அவருடைய புத்தகங்கள், மொழிபெயர்ப்பு பிரதிகளாக மாற்றுவதற்காக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. விண்வெளி ஆராய்ச்சியில் சிறப்பான பங்களிப்பால், ‘பத்ம பூஷன்’, பத்ம விபூஷன் விருது மற்றும் பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார்.
அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து இறந்தார்.கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுக்களாலும், இந்திய மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடல்களாலும் பெரிதும் அறியப்படுகிறார்.
2011ஆம் ஆண்டு அப்துல் கலாம் பிறந்தநாளை இனி உலக மாணவர்கள் தினமாக கொண்டாட ஐ.நா சபை அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் இன்று அப்துல்கலாம் பிறந்த நாள் கொண்டாடப்படுவது போல், அவரது மணிமண்டபம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் ஒளியூட்டப்பட்டது.