Tamilசெய்திகள்

9 மாதகால பணிகளை விரிவான அறிக்கையாக வெளியிட உள்ளோம் – அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு

சென்னை மாநகராட்சி 98-வது வார்டில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் பிரியதர்ஷினியின் மாமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். அதன்பின் அவர் பேசியதாவது:-

தமிழக அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறைக்கு 100 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தாலும், அதனையும் தாண்டி 200 கோடி செலவில் திருக்கோயில் திருப்பணிகள், குடமுழுக்கு திருப்பணிகள், நந்தவனங்கள் பராமரிப்பு, புதிய குளங்கள் ஏற்படுத்துதல், பழைய குளங்களை தூர்வாருதல், திருத்தேர்களை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனைக் கண்டு ஆன்மிகவாதிகளும், பக்தபெருமக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளை பாராட்டி வருகின்றனர்.

இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு சிலர் வேண்டுமென்றே அவதூறு விமர்சனங்களை தொடர்ந்து செய்துவருகின்றனர். எந்தவிதத்தில் விமர்சனங்கள் செய்தாலும் எங்களது பணியை நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் தொடர்ந்து செய்வோம்.

இந்து சமய அறநிலையத்துறை குறித்து தொடர்ந்து அவதூறு பரப்புவோருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 9 மாதங்களாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒதுக்கிய நிதி எவ்வளவு, எந்தெந்த திட்டங்களுக்கு அவை செலவிடப்பட்டது, எந்தெந்த திட்டங்களுக்காக செலவிடப்பட உள்ளது, எந்தெந்த திட்டங்களுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த திட்டங்களுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது, எந்தெந்த திட்டங்களுக்கு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது, என்னென்ன பணிகள் துவங்கப்பட உள்ளது என்பது குறித்து வருகின்ற செவ்வாய் அல்லது புதன்கிழமை வெளிப்படை தன்மையுடன் அறிக்கையாக வெளியிட உள்ளோம்.

இந்து சமய அறநிலையத்துறை வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. தவறுகள் எங்கு நடந்தாலும் அதனை இந்துசமய அறநிலையத்துறை நிச்சயம் வேடிக்கை பார்க்காது, தவறு செய்பவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். அதே நேரத்தில் காழ்ப்புணர்ச்சி காரணமாக புகார் செய்தால் அந்த புகாரின் உண்மைத் தன்மையை அறிந்து நிச்சயம் அதிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களுக்கு பயன் தரும் திட்டங்கள் எதையும் முதல்-அமைச்சர் நிச்சயம் புறக்கணிக்கமாட்டார், அதேவேளையில் திட்டங்களில் தவறுகள் நடந்தால் அதனை சீர்திருத்தி பார்க்க வேண்டியதும் முதல்வரின் கடமையாகும்.

அதன்படிதான் தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தில் கடந்த ஆட்சி நடந்த பல்வேறு குளறுபடிகள், நான்கு வருட காலமாக இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு எந்த ஒரு பயனும் கிடைக்காதது உள்ளிட்டவற்றை எல்லாம் கவனித்த முதல்-அமைச்சர் ஒரு பெண்ணிற்கு திருமணத்திற்கு முன்பே கல்வியிலும் , பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைய வேண்டுமானால் அப்பெண்ணிற்கு நிச்சயம் கல்வி அவசியம் என்பதை உணர்ந்து கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. உள்ளிட்டவற்றில் படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கிடும் புரட்சிகரமான திட்டத்தை அறிவித்துள்ளார்.

காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்ற பழமொழிக்கேற்ப, குறை காண வேண்டும் என்ற எண்ணத்தோடு பார்ப்பவர் கண்களுக்கு எல்லாமே குறையாகத்தான் தெரியும்.

இந்நிகழ்வின் போது எம்.எல்.ஏ.க்கள் அ.வெற்றியழகன் தாயகம் கவி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்வா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.