Tamilசெய்திகள்

8 ஆண்டுகளில் வருமான வரித்துறையினர் செய்த 5,931 சோதனைகள் மூலம் ரூ.8,800 கோடி சொத்துக்கள் பறிமுதல்

நாடு முழுவதும் கடந்த 2014-2015-ம் ஆண்டு முதல் 2021-2022 வரையில் வருமான வரி சோதனை நடத்திய 5,931 சோதனை நடவடிக்கையின்போது ரூ.8,800 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு பாராளுமன்ற மக்களவையில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான ஒரு கேள்விக்கு பதில் அளித்த நிதித்துறை இணை மந்திரி பங்கஜ்சவுத்ரி, கருப்பு பண சட்டத்தின்கீழ் ரூ.13,500 கோடிக்கும் மேல் வரிக்கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. 2015-ல் சட்டம் இயற்றப்பட்டதில் இருந்து இதுவரை 350 வழக்குகளில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.

ஏ.டி.எம்.களில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை ஏற்றலாமா?, வேண்டாமா? என்பது குறித்து வங்கிகளுக்கு எந்த உத்தரவும் வழங்கவில்லை என்றும் மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை நிரப்பாதது குறித்து வங்கிகளுக்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை.

கடந்த கால பயன்பாடு, நுகர்வோர் தேவை, பருவகால போக்கு போன்றவற்றின் அடிப்படையில் ஏ.டி.எம்.களுக்கான தொகை மற்றும் மதிப்பின் தேவையை வங்கிகள் தாங்களாகவே மதிப்பீடு செய்கின்றனர் என்று நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தார்.