8 அமைச்சரவை குழுக்கள் மாற்றம் – மத்திய அரசு நடவடிக்கை
நாட்டின் பொருளாதார நிலை மற்றும் வேலையின்மை ஆகியவற்றைப் பற்றி ஆலோசித்து சரியான முடிவுகளை எடுப்பதற்காக 2 புதிய அமைச்சரவை குழுக்களை பிரதமர் மோடி நேற்று அமைத்துள்ளார். முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான கேபினட் கமிட்டி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான அமைச்சரவை குழு என 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தலைமையில் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு குழுக்களிலும் உள்துறை மந்திரி அமித் ஷா இடம்பெற்றுள்ளார்.
5 உறுப்பினர்கள் கொண்ட முதலீட்டுக்கான அமைச்சரவை குழுவில், பிரதமர் மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்காரி, பியூஷ் கோயல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
10 பேர் கொண்ட வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான குழுவில், பிரதமர் மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர், ரமேஷ் பொக்ரியால், தர்மேந்திர பிரதான், மகேந்திர நாத் பாண்டே, சந்தோஷ் குமார் கங்வார், ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், 8 அமைச்சரவை குழுக்களை மாற்றியமைத்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு, பொருளாதாரம், பாராளுமன்றம், அரசியல் விவகாரம், முதலீடு, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு உள்பட 8 அமைச்சரவை குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.