Tamilவிளையாட்டு

7 வது புரோ கபடி – ரூ.50 கோடிக்கு 200 வீரர்கள் ஏலம்

7-வது புரோ கபடி லீக் போட்டி ஜூலை 19-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடக்கிறது. 12 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் மொத்தம் 29 வீரர்கள் ஏற்கனவே தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டுக்கான புரோ கபடி லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் நேற்று முன்தினமும், நேற்றும் நடந்தது. ஏலப்பட்டியலில் 53 வெளிநாட்டு வீரர்களும், 388 இந்திய வீரர்களும் இடம் பெற்று இருந்தனர். கடந்த ஆண்டில் மும்பை அணியில் இடம் பிடித்து இருந்த மராட்டியத்தை சேர்ந்த சித்தார்த் தேசாய் முதல் நாளில் அதிகபட்சமாக ரூ.1 கோடியே 45 லட்சத்துக்கு தெலுங்கு டைட்டன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

2-வது மற்றும் கடைசி நாளான நேற்று நடந்த ஏலத்தில் ‘டேக்கிள்’ செய்வதில் சிறந்தவரான நீரஜ் குமார் அதிக விலைக்கு போனார். அவரை வாங்க பெங்கால், குஜராத், அரியானா, பாட்னா, தமிழ் தலைவாஸ் அணிகள் கடும் போட்டி போட்டன. இறுதியில் அவரை ரூ.44.75 லட்சத்துக்கு பாட்னா பைரட்ஸ் அணி வாங்கியது.

விகாஸ் காலே (அரியானா) ரூ.34.25 லட்சத்துக்கும், நவீன் (அரியானா) ரூ.33.5 லட்சத்துக்கும், அஜித் (தமிழ் தலைவாஸ்) ரூ.32 லட்சத்துக்கும் ஏலம் போனார்கள். தமிழகத்தை சேர்ந்த கே.செல்வமணி ரூ.16.05 லட்சத்துக்கு அரியானா ஸ்டீலர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதேபோல் மற்றொரு தமிழக வீரர் சி.அருணை ரூ.10 லட்சத்துக்கு தெலுங்கு டைட்டன்ஸ் அணி சொந்தமாக்கியது

தமிழ் தலைவாஸ் அணியில் அஜய் தாகூர், மன்ஜீத் சில்லார், விக்டர் ஒன்யான்கோ ஆகியோர் தக்க வைக்கப்பட்டு இருந்தனர். ஏலத்தின் மூலம் ஹிமான்சு, அபிஷேக், ராகுல் சவுத்ரி, ரன் சிங், மொகித் சில்லார், அஜித், மிலாட் ஷேபக், ஷபீர் பாபு, யஷ்வந்த் பிஸ்னோய், வினித் ஷர்மா ஆகிய வீரர்களை தமிழ் தலைவாஸ் அணி தனதாக்கி உள்ளது. கடந்த 2 நாள் நடைபெற்ற ஏலத்தின் முடிவில் 12 அணிகளும் சேர்ந்து மொத்தம் 200 வீரர்களை (173 பேர் உள்ளூர், 27 பேர் வெளிநாட்டினர்) ரூ.50 கோடிக்கு வாங்கி இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *