Tamilசெய்திகள்

7 மலைகள் மீது ஏரி சாமி தரிசனம் – அமைச்சர் சேகர் பாபுக்கு குவியும் பாராட்டுகள்

கோவை வெள்ளிங்கிரியில் உள்ள 7 மலைகளை தாண்டி அங்குள்ள சிவனை பக்தர்கள் வழிபட்டு வருவார்கள். கரடு முரடாகவும், செங்குத்தாகவும் காணப்படும் இந்த மலையில் பக்தர்கள் பிடிமானத்துக்காக குச்சியை ஊன்றியபடியே மலையேறுவார்கள்.

சிறப்புமிக்க இந்த வெள்ளிங்கிரி கோவிலில் மலைப்பாதை அமைக்க சாத்தியக்கூறுகள் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள 7 மலைகளிலும் ஏறிச்செல்வது என அவர் முடிவு செய்தார். அதன்படி காலை 7 மணிக்கு மலையேற தொடங்கினார். பிற்பகல் 2 மணி அளவில் அவர் 6-வது மலைக்கு சென்றடைந்தார். அங்குள்ள ஆண்டி சுனையில் குளித்தார். பின்னர் மீண்டும் மலையேற தொடங்கி மாலையில் 7-வது மலையை அடைந்து சுவாமி தரிசனம் செய்தார்.

இந்த பயணம் குறித்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில் வெள்ளிங்கிரி மலை ஏற்றம் புதிய அனுபவம் அளித்தது எனவும், அதிக காற்று, அதிக குளிர் இருப்பதாகவும் தெரிவித்தார். செங்குத்தான மலைப்பாதையில் பக்தர்கள் ஏறுவதற்கு சில இடங்களில் கடினமான சூழ்நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக வரலாற்றில் அமைச்சர் ஒருவர் 7 மலைகளை ஏறி இறங்கியது இதுவே முதன்முறை என்கிறார்கள் பக்தர்கள். இதனால் அமைச்சர் சேகர்பாபுவுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.