X

7ம் வகுப்பு சிறுமிக்கு மீண்டும் கண் பார்வை கிடைக்கச் செய்த கனிமொழி எம்.பி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

அந்த வகையில் கடந்த 27-ந்தேதி திருச்செந்தூர் அருகே மேலாத்தூர் சொக்கப்பழங்கரை ஊராட்சியில் கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார். அப்போது கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியைக் கண்ட கனிமொழி எம்.பி, அந்த சிறுமியின் அருகே சென்று கண் பார்வை கோளாறு குறித்து அக்கறையோடு விசாரித்தார். அதற்கு அந்த சிறுமி, தனது பெயர் ரேவதி என்றும் 7-ம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறியவர், தனக்கு கண் பார்வை பிரச்சனை இருப்பதாகவும், அதற்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார்.

உடனே கனிமொழி எம்.பி., அவ்வளவு தானே சரி செய்துவிடலாம் என நம்பிக்கை பொங்க அந்தச் சிறுமியிடம் பேசி ஊக்கமும் உற்சாகமும் அளித்தார். அதைத் தொடர்ந்து நெல்லையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் சிறுமி ரேவதி அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு கடந்த 6-ந் தேதி அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிறுமி ரேவதி 7-ந்தேதி வீடு திரும்பிய நிலையில், ஏரல் தாசில்தார் கோபாலகிருஷணன் சொக்கப்பழங்கரை கிராமத்திற்கு சென்று ரேவதியிடம் நலம் விசாரித்தார். மேலும், கனிமொழி எம்.பி.யும் சிறுமி ரேவதியிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார்.

இதற்கு பதில் அளித்த அந்த சிறுமி கண் அறுவை சிகிச்சைக்கு உதவியதற்கு நன்றி கூறியதுடன், தான் வளர்ந்த பிறகு மருத்துவராக பணியாற்றுவேன் எனக் கூறினார். இதனிடையே தங்கள் மகளின் எதிர்காலம் குறித்த கவலையில் இருந்த ரேவதியின் பெற்றோர், சொன்னதை செய்த கனிமொழியால் நெகிழ்ந்துவிட்டனர்.

இதற்கிடையே பரியேறும் பெருமாள் படத்தில் ‘எங்கும் புகழ்’ பாடலுக்கு பாடிய ஸ்ரீ வைகுண்டம் புதுக்குடியை சேர்ந்த உருமி மேள இசைக்கலைஞர்களான முருகேசன், அவரது மருமகன் காளிதாசன் ஆகியோரது வீடு கனமழையால் சேதமாகி அங்கிருந்த நாஸ்வரம், தவில் ஆகியவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதனால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதனையறிந்த கனிமொழி எம்.பி. அவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இழப்புகளை பற்றி கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு புதிதாக இசைக்கருவிகள் வழங்கப்படும் எனவும் அவர்களிடம் உறுதி அளித்தார்.