Tamilசெய்திகள்

660 சாலை ஒப்பந்தங்கள் ரத்து! – சென்னை மாநகராட்சி நடவடிக்கை

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு சென்னை மாநகராட்சியில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடிக்கு புகார்கள் வந்தன.

அதன் அடிப்படையில் சென்னையில் பல்வேறு சாலைகளில் கமிஷனர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். தேர்தலுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்தும், சாலைகளின் தரம் குறித்தும் துணை கமிஷனர்கள் மற்றும் என்ஜினீயர்கள் ஆய்வு செய்ய அவர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வில் பல்வேறு சாலைகள் தரமானதாக இருந்தும், மறுசீரமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் 660 சாலை ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அவசர அவசரமாக 3 ஆயிரத்து 200 சாலைகள் புனரமைக்க ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக பஸ் செல்லாத சாலைகள், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொண்டால் போதும் என்ற அளவில் உள்ள சாலைகள் மற்றும் தரத்துடன் உள்ள நல்ல சாலைகளை மறுசீரமைக்க முறைகேடாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசின் வளர்ச்சி நிதி பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் தற்போது 660 சாலைகள் மறுசீரமைப்பதில் உள்ள முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தங்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது முழுமையாக அனைத்து சாலைகளும் கண்டறியப்பட்டு அதன்பின், எந்தெந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என்பது இறுதி செய்யப்படும். இந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டால் மாநகராட்சிக்கு ரூ.43 கோடி இழப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

அதேபோல் மழைநீர் வடிகால் சீரமைப்பும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதிலும் முறைகேடு நடந்து இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. அவற்றையும் தர ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் குறித்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. ஒவ்வொரு புகாரையும் கமிஷனர் நேரடியாக விசாரித்து வருகிறார்.

எனவே பல்வேறு துறைகளின் ஒப்பந்தங்கள் ரத்து செய்ய வாய்ப்புள்ளது. இதன் மூலமாக மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு தடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.