65 அணிகள் பங்கேற்கும் பெர்ட்ராம் விளையாட்டு போட்டிகள் சென்னையில் இன்று தொடங்குகிறது
லயோலா கல்லூரி சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் பெர்ட்ராம் நினைவு விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான கல்லூரிகள், பள்ளிகள் இடையேயான 89-வது பெர்ட்ராம் நினைவு விளையாட்டு போட்டிகள் இன்று ( 15- ந் தேதி) முதல் 31-ந் தேதி வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அந்த கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.
இதில் லயோலா, எம்.சி.சி, திருச்சி ஜமால் முகமது பி.எஸ்.ஜி. (கோவை) உள்பட 50 கல்லூரிகளும், 15 பள்ளிகளும் ஆகமொத்தம் 65 அணிகள் பங்கேற்கின்றன. கேரளாவில் இருந்து 2 அணிகளும், பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியும் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. 2 ஆயிரம் வீரர்கள் இந்த விளையாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
கைப்பந்து, கூடைப்பந்து, பால் பேட்மிண்டன், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், செஸ், கபடி, கோகோ ஆகிய விளையாட்டுகள் நடைபெறுகிறது. பள்ளி மாணவர்களுக்கு கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் டென்னிஸ் (ஒற்றையர் பிரிவு) ஆகிய போட்டிகள் நடக்கிறது.
பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கு முதல் முறையாக கைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.2 லட்சமாகும். மேற்கண்ட தகவலை லயோலா கல்லூரி முதல்வர் ஏ. லூயிஸ் ஆரோக்கியராஜ், விளையாட்டு இயக்குனர் எம்.எஸ். ஜோசப் அந்தோணி ஜேக்கப், உடற்கல்வி இயக்குனர் எஸ். விஜயகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.