X

65வது படத்திற்கு தயாராகும் விஜய்!

விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய்சேதுபதியும் நடித்துள்ளனர். கொரோனா பரவல் முடிவுக்கு வந்தால், அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந்தேதி மாஸ்டர் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

நடிகர் விஜய், தனது 65-வது படத்தில் நடிக்க தயாராகி வருவதாகவும், இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதன்படி விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக பேசப்பட்டது. இயக்குனர்கள் பாண்டிராஜ், அருண்ராஜா காமராஜ், பார்த்திபன், சுதா கொங்கரா, அஜய் ஞானமுத்து ஆகியோரில் ஒருவர் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்பட்டது.

இறுதியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற படங்கள் வந்து வசூல் குவித்தன. துப்பாக்கி 2-ம் பாகத்தை எடுப்பேன் என்று முருகதாஸ் ஏற்கனவே கூறியிருந்தார். எனவே விஜய்யின் அடுத்த படம் துப்பாக்கி 2-ம் பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.